சினிமா துறையில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இதில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரது இசையில் வெளியான பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. இவரை சினிமா உலகில் டிஎஸ்பி என சுருக்கமாக அழைக்கின்றனர்.
துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அஜீத்குமார் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். குட் பேட் அக்லி என்ற இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அஜீத் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன்தாஸ், பிரபு, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.
குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் மற்றும் ஸ்பெயினில் நடந்து முடிந்துள்ளது. இப்போது பல்கேரியாவில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜீத்குமார் 3 கேரக்டர்களின் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சில காரணங்களால் குட் பேட் அக்லி படத்தில் இருந்து இசையமைப்பாளர் டிஎஸ்பியை மாற்றும் திட்டத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உள்ளதாகவும், தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக அனிருத் அல்லது ஜீவி பிரகாஷ்குமார் இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜீத்குமாரின் விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படத்துக்கும் அவரை கமிட் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே புஷ்பா 2 படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு சாம்ஸ் சிஎஸ் பின்னணி இசை அமைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. புஷ்பா 2 படத்தை போலவே, குட் பேட் அக்லி படத்திலும் ஏற்பட்ட பிரச்னையால் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்தில் இருந்து விலகியதாக தெரிய வந்துள்ளது.





