நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவராக தனது அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார். நேற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் வேப்பேரியில் உள்ள ஈவேரா சிலைக்கு நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசியல் களத்தில் ஆர்வம் காட்டி வரும் விஜய் வருகிற 23ம் தேதி விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த ஏற்பாடுகளை செய்து வந்தார்.
ஆனால் போலீசார் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் அந்த ஏற்பாடுகளை துரிதமாக செய்ய முடியாது என்ற சூழ்நிலையில், வருகிற 23ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 15ம் தேதிக்கு மாநாட்டை தள்ளி வைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆளுங்கட்சி தரப்பில் விஜய் கட்சி அரசியல் மாநாட்டை நடத்துவதில் பல்வேறு இடையூறுகளையும் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு நீடிக்கிறது.
முதலில் மதுரையில் விஜய் தனது கட்சி அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டார். அங்கு இடம் கிடைக்காததால் அடுத்து திருச்சியில் நடத்தலாம் என்று அதற்கான ஏற்பாடுகளை செய்தார். அங்கும் இடம் கிடைக்காமல் பல்வேறு மாவட்டங்களில் அவர் முயற்சித்தும் மாநாடு நடத்த தொடர்ந்து ஆளுங்கட்சி தரப்பில் இடையூறு ஏற்படுத்தியதால், கடைசியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விசாலை என்னும் கிராமத்தில் மாநாட்டை நடத்த முயற்சித்தார்.
ஆனால் அதுவும் இப்போது போலீசாரின் கிடுக்கப்பிடி நிபந்தனைகளால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 15ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டிலும் 50 ஆயிரம் பேர் தான் கலந்து கொள்ள முடியும் என்ற சூழ்நிலையில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வர வேண்டிய மாநாட்டை 50 ஆயிரம் மட்டுமே என்ற நிபந்தனைக்குட்படுத்தி விஜய்க்கு நெருக்கடி தருவது ஆளுங்கட்சியின் அராஜகப் போக்கை காட்டுவதாக விஜய் கட்சியினர் குற்றம் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் விஜய் தொடர்ந்து விசேஷ நாட்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார். 2 தினங்களுக்கு முன் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். ஆனால் தமிழ் புத்தாண்டு மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு நடிகர் விஜய் வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் எதிர்மறை கருத்துகளை செய்து வந்தனர். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லியது திமுக போல் தான் விஜயின் போக்கும் இருக்கிறது என்று விமர்சித்தனர்.
இந்நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, பகாசுரன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி, நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிகம் பிடித்த தலைவராக விஜய் வருவது நல்லதுதான். ஆனால் அவரும் தவறான பாதையில்தான் சொல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது வருத்தமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





