தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் முத்தையா. நடிகர் சசிக்குமார் நடித்த குட்டிப்புலி படம் மிகப்பெரிய வரவேற்பை முத்தையாவுக்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து கொம்பன் மருது கொடிவீரன் விருமன் தேவராட்டம் காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களை முத்தையா இயக்கியிருக்கிறார்.
சசிக்குமார் கார்த்தி விஷால் கௌதம் கார்த்திக் ஆர்யா விக்ரம் பிரபு என முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்தாலும் இயக்குனர் முத்தையா மீது சாதிய படங்களை இயக்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய இயக்குனர் முத்தையா பல விஷயங்களை ரசிகர்களுடன் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
நேர்காணலில் இயக்குனர் முத்தையா கூறியதாவது, என் சினிமா வாழ்க்கையில் பாரதிராஜா மகேந்திரன் இருவரும் தான் என்னுடைய மானசீக குருக்களாக இருக்கின்றனர். கொம்பன் படத்தில் வரும் முத்தையா கதாபாத்திரம் முதலில் கமல் சாரை மனதில் வைத்து தான் எழுதினேன். அவரைப் பார்த்து கதை சொல்ல முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை.
அதன்பிறகுதான் ராஜ்கிரண் சார் அந்த கேரக்டரில் நடிக்க வந்தார். என் வாழ்வில் நடந்த உண்மையை முத்தையாவாக கொம்பன் படத்தில் உருவாக்கினேன். மேலும் கமல் சாரை மூன்று முறை தான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர் நாம் தொட முடியாத உச்சம். கொம்பன் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வந்து என்னை சந்தித்து பேசினார்.
அப்போது தேவர் மகன் 2 நீங்கதான் எடுக்கணும் என்று சொன்னார். நான் கொஞ்சம் தயங்கிக் கொண்டே சார், அது எப்படிப்பட்ட படம்? தேவர் மகன் 2 நான் எடுத்தால் நல்லா இருக்குமா என்று கேட்டேன். கமல் சார் ஓகே சொன்னால் நான் எடுக்க தயார் என்றும் கூறினேன். நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லாம் பாசிட்டிவா தான் இருக்கு. கமல் சார் லண்டன் போயிருக்கிறார். வந்ததும் அவர்கிட்ட பேசிவிட்டு சொல்கிறேன் என்று முரளி சொன்னார்.
அதன்பிறகு இதுவரை கதை டிஸ்கஷனில்தான் இருக்கிறது. கமல் சார் இல்லாமல் தேவர் மகன் 2 படம் இல்லை. சக்திவேலுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்தால் எப்படி இருக்கும் என்பது போல கதையை மாற்றலாம். தேவர் மகன் 2 படத்தை இயக்குவது என்பது என் வாழ்நாள் கனவு என்று இயக்குனர் முத்தையா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தேவர் மகன் 2 படத்தை இயக்க முத்தையா ஆர்வம் காட்டுவது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.





