இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படம் அரசன். நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா யோகலட்சுமி பிரியங்கா மோகன் கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
அரசன் படத்தின் முதல் ஷெட்யூல் கோவில்பட்டியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த நிலையில் இப்போது சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட ஷெட்டில் 2வது ஷெட்யூல் துவங்கி நடந்து வருகிறது. நடிகர் சிம்பு பிரியங்கா மோகன் நடிக்கும் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இயக்குனர் கேரக்டரிலேயே படத்தில் வருவதாக பேசப்பட்டது. படத்தில் அவரும் ஒரு முக்கியமான கேரக்டர் என்றும் சொல்லப்பட்டது. இந்த படத்தின் பிரமோ ஷூட்டிங்கில் நெல்சனும் கலந்துக்கொண்டு நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது அரசன் படத்தில் இருந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விலகி விட்டார் என்று தெரிய வந்துள்ளது.
அரசன் படத்தில் நெல்சன் நடிக்க கமிட் ஆகும் போதே, எனக்கு ஜெயிலர் 2 மற்றும் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படம் என கைவசம் உள்ளது. ஒருவேளை இந்த படங்களின் ஷூட்டிங்கில் நான் பிஸியாக இருந்தால் அரசன் படத்தில் நடிக்க முடியாமல் போகலாம். அதனால் அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ளுங்கள் என்று ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறனிடம் கூறிவிட்டு தான் அரசன் படம் பிரமோ ஷூட்டில் நெல்சன் நடித்திருக்கிறார்.
அதே போல் ஜெயிலர் 2 மற்றும் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தில் நெல்சன் இப்போது பிஸியாகி விட்டதால் அரசன் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அதனால் நெல்சனுக்கு பதிலாக ஓ மை கடவுளே டிராகன் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அரசன் படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.
இப்போது அவர் நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான ஆடிஷன் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் அரசன் ஷூட்டிங்கில் நெல்சன் ப்ரீயாக இருக்கும் பட்சத்தில் அவரையே நடிக்க வைக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். ஒருவேளை அவர் வர முடியாத பட்சத்தில் மட்டுமே அஸ்வத் மாரிமுத்து அந்த டைரக்டர் கேரக்டரில் நடிப்பார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





