தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஆனால் தி கோட் படத்தை தொடர்ந்து தனது 69வது படத்தில் நடித்து விட்டு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிடுவதாக ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்து விட்டார். இப்போது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய விஜய் கட்சி பாடலையும் வெளியிட்டார். வரும் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பையும் விஜய் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இந்த மாநாட்டில்தான் தனது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், எதிர்கால திட்டங்கள் தமிழகத்தில் அவர் கொண்டு வரக்கூடிய மாற்றங்கள் என பல விஷயங்களைப் பற்றி பேச இருக்கிறார்.
இதற்கிடையே நடிகர் விஜய் நடித்த பல படங்களின் நடிகர் வடிவேலுவும் காமெடி ரோலில் இணைந்து நடித்திருக்கிறார். பல படங்களில் அவர்கள் இருவரது காமெடி கூட்டணி பெரிய வெற்றியை பெற்று தந்திருக்கிறது. குறிப்பாக பகவதி, மதுர, சச்சின், பிரெண்ட்ஸ், போக்கிரி, வில்லு என பல விஜய் படங்களில் வடிவேலு காமெடி ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்று இருக்கிறது.
மலையாள பட இயக்குனர் சித்திக்கு இயக்கத்தில் வெளிவந்த படம் பிரண்ட்ஸ். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவம் குறித்து, அந்த படத்தில் நடித்த நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் பங்கேற்ற ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
பிரண்ட்ஸ் படம் குறித்து நடிகர் ரமேஷ் கண்ணா கூறுகையில், பிரெண்ட்ஸ் படத்தில் ஒரு காட்சியில் கடிகாரம் உடைந்து விடும். சூர்யா, நான், விஜய், சார்லி ஆகிய நான்கு பேரும் அந்த பெரிய கடிகாரத்தை தூக்கி செல்வது போன்ற காட்சியில் விஜய் கடிகாரத்தை பிடிக்காமல் விடுவதால், கடிகாரம் கீழே விழுந்து நொறுங்கி போகும் காட்சி படம் பிடிக்கப்பட்டது.
இந்த காட்சியை இயக்குனர் படம் எடுக்கும் போது நடிகர் விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார். மறுபடியும் காட்சியை எடுக்கும் போதும் மீண்டும் சிரித்தார். இப்படியே மூன்று நான்கு முறை டேக் எடுத்தும் மீண்டும் விஜய் சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சிரிக்க ஆரம்பித்து விட்டால் அவரை கண்ட்ரோல் செய்வது மிகவும் கஷ்டம். அப்புறம் அவரே நான் திரும்பி நின்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகுதான் அந்த சீன் எடுத்தோம், என்று ரமேஷ் கண்ணா கூறியிருக்கிறார். நடிகர் வடிவேலு செய்த காமெடியால், விஜய் சிரிப்பை அடக்க முடியாமல் பலமுறை சிரித்து டேக் வாங்கிய நிகழ்ச்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.





