மனித வாழ்க்கையில் நட்புக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. சிறு வயதிலும், வாலிப பருவத்திலும், ஏன் முதுமையிலும் கூட நட்பு, மனிதர்களுக்கு மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட தன் நண்பனுக்காக, பிரபல இயக்குநர், திடீரென தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அது, பலரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்ளைத் தொடர்ந்து ஜெயிலர் படம் மூலம், தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில் ஒருவராக மாறி இருக்கிறார் நெல்சன் திலீப் குமார். அடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள படம் ஒன்றையும், இதற்கிடையே ஜெயிலர் பாகம் 2 படத்தையும் நெல்சன் இயக்க திட்டமிட்டுள்ளதாக, கோலிவுட்டில் பரபரப்பாக தகவல் பரவி வருகிறது.
பீஸ்ட் படத்தின் தோல்வியால், ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்குமா, மறுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், பீஸ்ட் வசூல் ரீதியாக லாபம் தந்த படம் என, படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் பச்சைக்கொடி காட்டியதால், ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கினார். படம் பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது.
அடுத்து, நெல்சன் யார் படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக, ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்து அவர் இயக்கப் போகும் படத்துக்கு இப்போதே, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், அதுபற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு, இன்னும் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், கோலமாவு கோகிலா படம் முதல் ஜெயிலர் படம் வரை, தன்னுடன் உதவி இயக்குநராக பணிசெய்த சிவபாலன் என்கிற சிவா, புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்கிறார். நெல்சன் தனது நீண்டகால நண்பருக்காக, இந்த படத்தின் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். சிவபாலன் இயக்குகிற இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். பிரியங்கா மோகன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, அனிரூத் இசை அமைக்கிறார்.
நெல்சன் படம் என்றாலே, அனிரூத் இசை என்பதால், அவரது நண்பர் இயக்கும் புதிய படத்திலும் அதே இசை நட்பு தொடர்கிறது. டாக்டர் படத்தில் நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். ஒருவேளை இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றால் இயக்குநராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் தன் சினிமா பயணத்தை தொடர வாய்ப்புள்ளது.





