விஜய்யின் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இதில் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, பிரியா ஆனந்த் உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்ற கேங்கஸ்டராக நடித்துள்ளார் என தெரிய வருகிறது. இதில் அவர் வில்லன் என்றும் கூறப்படுகிறது.
சஞ்சய் தத் சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். “கேஜிஎஃப் 2” திரைப்படத்தில் வில்லனாக கலக்கியதில் இருந்து அவரை தென்னிந்திய சினிமா உலகம் மொய்த்துக்கொண்டது. தற்போது “லியோ” திரைப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத், இதனை தொடர்ந்து அஜித் திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
அதாவது “விடாமுயற்சி” திரைப்படத்தில் சஞ்சய் தத், வில்லனாக நடிக்க உள்ளாராம். “விடாமுயற்சி” திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதமே வெளிவந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.
இதனிடையே அஜித்குமார் பல நாடுகளுக்கு பைக் பயணம் சென்று வந்தார். ஆதலால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்விக்குறியாகவே இருக்கிறது. இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளார் எனவும் கூறப்பட்டது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில்தான் “விடாமுயற்சி” திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் சஞ்சய் தத் கோலிவுட்டிலேயே தங்கிவிடுவார் போலயே.





