இயக்குனர் நெல்சன் இப்போது தயாரிப்பாளர் நெல்சனாக மாறியிருக்கிறார். முதலில் சின்னத்திரையில் அது இது எது நிகழ்ச்சியை இயக்கி வந்த அவர், அங்கிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார். நெல்சனுக்கு முதல் திரைப்படமாக அமைந்தது வேட்டை மன்னன் தான்.
சிம்பு கதாநாயகனாக நடித்த இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் பாதியிலேயே நின்று போனது. இதன்பிறகு பொறுமை காத்த இயக்குனர், நீண்ட காலத்திற்குப் பிறகு நயன்தாராவை முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை கொடுத்து அசத்தினார்.
இதன் பிறகு, சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து எடுத்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிறகு விஜயை வைத்து பீஸ்ட் மற்றும் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அதன் மூலம் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்தார் நெல்சன்.
இப்படியான சூழலில் தான் அவர் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். தனது உதவியாளர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கியிருக்கும் திரைப்படமான பிளடி பெக்கரை சொந்த செலவில் எடுத்திருக்கிறார் நெல்சன். இதன் ஃப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் நடைபெற அதில் படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய நெல்சன்,
வேட்டை மன்னன் திரைப்படத்திலிருந்து சிவபாலன் என்னுடன் இருக்கிறான். ஜெயிலர் படத்தின் சூட்டிங்கின் போது தான் அவன் இந்த கதையை என்னிடம் கூறினான். நான் அப்போது ஜெயிலர் படம் வெற்றி பெற்று விட்டால் இந்த படத்தை தயாரிப்பதாக தெரிவித்தேன். இதனால் என்னைவிட அவனே இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தான். அதன் பிறகு இது நடந்தது.
இந்தத் திரைப்படத்தில் தனுஷ் அல்லது விஜய் சேதுபதியை வைத்து பண்ணலாம் என்று நான் கூறினேன். ஆனால் சிவபாலன் தான் கவின் வேண்டும் என்று உறுதியாக இருந்தான். ஆனால் கவின் இந்த திரைப்படத்திற்கு சரியாக இருக்க மாட்டார் என நினைத்தேன். ஆனால் அவரது நடிப்பை தற்போது பார்த்தேன். முதலில் அவரை வேண்டாம் என நான் ஒதுக்கியது எவ்வளவு பெரிய தவறு என்பது அப்போது தான் புரிந்தது என்று நெல்சன் தெரிவித்துள்ளார். வரும் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு பிளடி பெக்கர் திரைப்படம் வெளியாகிறது.





