பொங்கல் பண்டிகைக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நடிகர் ஜீவாவுக்கும் இது சூப்பர் கம்பேக் தந்துள்ளது. இந்த படத்தை இயக்கி தமிழில் அறிமுகமானவர் மலையாள இயக்குனர் நிதிஷ் சஹதேவ். இவர் மலையாளத்தில் பாலிமி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர். பஷில் ஜோசப் நாயகனாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தலைவர் தம்பி தலைமையில் படத்தின் இயக்குனர் நிதிஷ் சஹதேவ் கூறியதாவது, டிடிடி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்பு பஷில் ஜோசப் நடித்த பாலிமி படத்தை இயக்கினேன். அந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. டிடிடி படம் பார்த்துவிட்டு பஷில் ஜோசப் போன் செய்து பாராட்டினார். நான் நடித்த பராசக்தி படம் பாத்தியா என்றும் கலாய்த்தார்.
அடுத்து நான் மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்குகிறேன். சில வாரங்களில் பட வேலைகள் தொடங்க உள்ளது. கோட்டயத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் பின்னணியில் தான் தலைவர் தம்பி தலைமையில் படத்தின் கரு உருவானது. அடுத்தடுத்த வீட்டில் ஒரே நேரத்தில் நடக்கும் திருமணம், இறுதி சடங்கு நடந்தால் என்ன நடக்கும் என்ற மாறுபட்ட கோணத்தில் இந்த படத்தை இயக்கினேன்.
கதை திரைக்கதையை பலரும் குறிப்பிட்டு பாராட்டினார்கள். நானும் என் நண்பர்கள் 3 பேரும் இணைந்து ஸ்கிரிப்ட் எழுதினோம். மலையாள படங்களுக்கே உரிய ஸ்பெஷல் பாணியில் கதை எழுதினோம். 45 நாட்களில் படத்தை எடுத்து முடித்து விட்டோம். ஆனால் செலவு அதிகமாகவில்லை. மலையாளத்தில் காலை முதல் இரவு வரை படப்பிடிக்கும் நடத்துவோம். அந்த கால்சீட் அப்படிப்பட்டது. அந்த அனுபவம் இருந்ததால் வேகமாக காட்சிகளை எடுக்க முடிந்தது.
அதேபோல் சின்ன சின்ன கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததும் படத்தை ஹிட் ஆக்கியது. காமெடியும் ஒர்க் அவுட் ஆனது. ஜீவாவுக்கும் படம் சிறப்பாக உருவானதில் பங்கு உண்டு. அவர்தான் கிரியேட்டிவ் தயாரிப்பாளர். அவரே படத்தை இப்போது விளம்பரப்படுத்தி வருகிறார். ரஜினிகாந்த் அஜீத்குமாரை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன்.
உண்மையைச் சொன்னால் ரசிகர்களின் ரசனை இப்போது நன்கு மாறியுள்ளது. அவர்கள் ஸ்டார், பட்ஜெட் எல்லாம் பார்ப்பதில்லை. நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு பெரிய நடிகர் படங்களை விட கதை அம்சம் உள்ள படங்களை தான் ரசிகர்கள் கொண்டாடினார்கள். தமிழக மக்களுக்கு நன்றி என்று இயக்குனர் நிதிஷ் சஹதேவ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





