கடந்த ஆண்டில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். சுருக்கமான தி கோட் என அழைக்கப்பட்ட இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு டைரக்ட் செய்திருந்தார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் மொத்த வசூல் 445 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்து முதலிடத்தை பிடித்தது விஜய் நடித்த தி கோட் படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த அமரன் படம் ரூ. 325 கோடி வசூலித்து இரண்டாமிடமும் ரஜினி நடித்த வேட்டையன் படம் ரூ. 265 கோடி வசூலித்து 3ம் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டது.
இப்போது நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்துக்கு ஜனநாயகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இதுதான். அதே நேரத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி படமும் இதுதான்.
கடந்த 2023ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் போர்த்தொழில். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா டைரக்ட் செய்திருந்தார். சரத்குமார் அசோக் செல்வன் நிகிலா விமல் சரத்பாபு தேனப்பன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். மிரட்டும் வில்லனாக சுனில் சுகதா மிரட்டியிருந்தார்.
கன்னத்தில் குழிவிழும் தனது அழகான மனைவி தன்னை ஏமாற்றி வேறொரு ஆணுடன் சென்றுவிட்டதால், அந்த கோபத்தில் கன்னத்தில் குழிவிழும் இளம்பெண்களை தேடி தேடி கொடூரமாக கொலை செய்யும் சீரியல் கொலைகாரனை பிடிக்கும் போலீஸ் அதிகாரிகளாக சரத்குமார், அசோக் செல்வன் இந்த படத்தில் நடித்திருந்தனர். சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இது பெரிய வரவேற்பை பெற்றது.
அடுத்து போர்த் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா தான், கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான அந்த தயாரிப்பு நிறுவனம், விக்னேஷ் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளது. இன்னும் நாயகன், நாயகி எல்லாம் முடிவாகவில்லை. இதற்கிடையே நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை விக்னேஷ் ராஜா இயக்க கமிட் ஆகியிருக்கிறார். அந்த படத்துக்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.





