நடிகர் விஜய் அதிகமான காதல் படங்களில் ஆரம்பத்தில் நடித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறி அதிரடி நாயகனாக மாறினார். அதில் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத் தந்த சில படங்களில் திருப்பாச்சி மற்றும் சிவகாசி என்ற 2 படங்களும் மிக முக்கியமான படங்களாக இருந்தன. இந்த படங்களை இயக்கியவர்தான் இயக்குனர் பேரரசு.
சிவகாசி மற்றும் திருப்பாச்சி படங்களை தொடர்ந்துதான் நடிகர் விஜய் தொடர்ந்து பல ஆக்சன் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக மாறினார். இயக்குனர் பேரரசு எப்போதுமே தனது படங்களுக்கு பிரபல ஊர்களின் பெயர்களையே டைட்டிலாக வைப்பார். சிவகாசி திருப்பாச்சி தர்மபுரி திருவண்ணாமலை பழனி திருத்தணி என்று வைத்திருக்கிறார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதல் தமிழ் சினிமாத் துறையை சார்ந்த ஒரு சிலர் மட்டுமே வெளிப்படையாக தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் இயக்குனர் பேரரசும் ஒருவர். அவர் ஒவ்வொரு முறையும் விஜய் அரசியலுக்கு வர தகுதியானவர்தான். மக்கள் மத்தியில் ஒரு அரசியல்வாதியாக நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் கூறி வருகிறார்.
திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்த விழாவில் அவர் பேசியதாவது, எம்ஜிஆரை போன்ற செல்வாக்கு மிக்க நடிகரை பார்க்க முடியாது. ஒரு காலத்தில் அவரையே கூத்தாடி என அழைத்தார்கள்.
இன்று நடிகர் விஜயை கூத்தாடி என்று கூறுகிறார்கள். இப்படி கூறியதால் எம்ஜிஆர் ஒன்றும் இறங்கிப் போகவில்லை. நாம் வணங்கும் சிவனும் கூத்தாடிதான். கூத்தாடி என்றால் அவமானமா? உதயநிதி ஸ்டாலினும் படங்களில் நடித்தார். இப்போது அவர்தான் துணை முதலமைச்சராக இருக்கிறார். அப்படிப் பார்த்தால் அவரை துணை கூத்தாடி என்று அழைக்கலாமா?
விஜய் கூத்தாடி என்றால் உதயநிதியும் கூத்தாடி தான் என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கோவையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நடிகர் ரஞ்சித் தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்த நிலையில், இயக்குனர் பேரரசு நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.





