நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன்ராம். அடுத்து சத்யராஜ் சசிக்குமார் நடித்த எம்ஜிஆர் மகன், விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படங்களை தந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அவரது இயக்கத்தில் அடுத்து சிவகார்த்தியேன் நடித்த சீமராஜா படமும் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் இப்போது மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்த கொம்பு சீவி என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இதில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். புதுமுகம் தார்னிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் சுஜித் சங்கர் கல்கி முனிஸ்கான் காளிவெங்கட் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. வருகிற 19ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது இந்நிலையில் கொம்பு சீவி படம் குறித்து இயக்குனர் பொன்ராம் கூறியதாவது, கடந்த 1996ம் ஆண்டு காலகட்டத்தில் தேனி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவக் கதையை மையப்படுத்தி சில மாற்றங்களுடன் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
வைகை அணை கட்டும்போது 12 கிராமங்கள் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. மக்கள் இடம்பெயர்ந்தாலும் அந்த மக்களின் வாழ்வாதாரம் அந்த பகுதியை சுற்றிதான் இருக்கும். அணையில் தண்ணீர் வற்றினால் அவர்கள் வைத்த கிணறு, பல ஆண்டுகளாக வசித்த வீடு ஆகியவை அடையாளங்களாக தெரியும்.
நான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப்பிடிப்புக்காக அந்த பகுதிக்கு சென்றபோது அணைக்குள் ஒரு கிணறு இருந்தது. அதில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். தண்ணீர் வந்து அணை நிரம்பினால் அதை விட்டுவிடுவார்கள். இந்த பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில் தான் கொம்பு சீவி படம் உருவாகியுள்ளது. ஒரு விஷயத்தை தூண்டிவிடுவதற்கு கொம்பு சீவி விடுவது என்று கிராமங்களில் சொல்வார்கள். அதன் அடிப்படையில் வைக்கப்பட்ட தலைப்பு தான் இது.
கொம்பு சீவி படத்தில் சரத்குமார் சண்முக பாண்டியன் இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். வழக்கமாக என் படங்களில் எடுப்பது போன்ற ஆக்சன், காமெடிக்கு இந்த படத்திலும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறோம். படத்தின் நாயகியாக நடித்துள்ள தார்னிகா முன்னாள் நடிகை ராணியின் மகள். அவர் இந்த படத்தில் போலீஸாக நடித்துள்ளார் என்று இயக்குனர் பொன்ராம் கூறியிருக்கிறார்.





