ஒரு காலத்தில் கன்னட சினிமா என்றாலே பலரும் அதை கலாய்க்க தொடங்குவார்கள். திரைக்கதையில் தொடங்கி அதன் மேக்கிங் வரை அவ்வளவு சொதப்பல்கள் இருந்ததால் தென்னிந்தியாவில் முன்னேறாத வட்டத்திற்குள் அது இருந்தது. இப்படி இருந்த கன்னட சினிமா தற்போது புகழின் உச்சிக்கே சென்றிருக்கிறது. ஆண்டுதோறும் அங்கிருந்து வெளியாகும் திரைப்படங்கள், இந்தியாவை மட்டும் அல்லாமல் உலகையும் கவனம் பெற வைக்கின்றன.
கன்னட திரை உலகை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். கே ஜி எஃப் என்னும் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களின் புருவத்தை உயர்த்த செய்த அவர், அதன் மூலம் கன்னட திரையுலகை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றார். உக்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகம் ஆகினார்.
இதைத்தொடர்ந்து அவரது இரண்டாவது திரைப்படமாக அமைந்தது தான் கே ஜி எஃப். திரைக்கதையிலும் சரி, வசனத்திலும் சரி, சண்டைக் காட்சியிலும் சரி அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் கன்னட சினிமாவை தாண்டி தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கேஜிஎப் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
கன்னட உலகில் முதல்முறையாக ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி கே ஜி எப் படத்தின் இரண்டாம் பாகம் வசூலித்தது. இப்படியான சூழலில் தற்போது, பிரபாஸ், மலையாள நடிகர் பிரிதிவிராஜ் ஆகியோரை வைத்து சலார் படத்தை இயக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல். இந்தத் திரைப்படமும் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம், அடுத்த மாதம் 22 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படம் குறித்து பேசி இருக்கும் இயக்குனர் பிரசாந்த் நீல்,
இது இரண்டு நண்பர்களுக்கான கதை. இருவரில் யார் மிகப்பெரிய எதிரி ஆகிறார்கள் என்பதைத்தான் படம் பேசும். நட்புதான் இந்த படத்தில் ஒரு உணர்ச்சியாக இருக்கும். இதன் முதல் பாகத்தில் படத்தின் முதல் பாதியை தான் நாங்கள் கூறியிருக்கிறோம். கேஜிஎப், சலார் இரண்டுமே வெவ்வேறு கதைகள். ரசிகர்கள் இதனை இன்னொரு கேஜிஎப் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இது உணர்வு, கதாபாத்திரங்களுக்கான ஒரு உலகத்தை கொண்டது. கே ஜி எஃப் படத்தை தொடங்குவதற்கு முன்பே சலார் படத்தின் கதையை நான் எழுதி விட்டேன். இதன் கதை மிகப் பெரியது. இதை படத்தில் ஒழுங்காக சொல்லி முடிக்கவே ஆறு மணி நேரம் ஆகும். பிரபாஸ் சார் யாரிடமும் காட்டாத அப்பாவித்தனத்தை காட்டுவார். அதேசமயம் ஆக்ரோஷத்தையும் அவர் காட்டுவார். சலாம் படத்தில் அவர் கதாபாத்திரம் சரியாக பொருந்தி உள்ளது. பிரபாஸ் சார் மிகவும் பெரியவர் அதேசமயம் மென்மையானவர் என்று தெரிவித்துள்ளார்.





