பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சிறந்த நடிகையாக பல படங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார். 36 வயதாகும் இவர் நான்குமுறை தேசிய விருதுகள், ஐந்துமுறை பிலிம்பேர் விருதுகளை பெற்றவர். 2020ம் ஆண்டில் இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்றவர் கங்கனா ரனாவத்.
கங்கனா ரனாவத் சிறந்த நடிகை என்பது மட்டுமின்றி சர்ச்சை நாயகி என்ற பெயருக்கும் சொந்தக்காரர். அடிக்கடி ஏதேனும் சில சர்ச்சையான கருத்துகளை சொல்லி, பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவார். முக்கிய விருதுகளை புறக்கணிப்பார். விருது விழாக்களை கடுமையாக விமர்சித்து பேசுவார். இதனால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வார்.
தமிழில் தாம்தூம் என்ற படத்தில் ஜெயம் ரவியுடன் கங்கனா ரனாவத், அடுத்து தலைவி என்ற படத்தில் நடித்தார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன்பிறகு பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் நடித்தார். ரஜினிகாந்த் கேரக்டரில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்தார். இந்த படம் தமிழில் தனக்கு நல்ல முக்கியத்துவத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தரும் என்று கங்கனா ரனாவத் எதிர்பார்த்த நிலையில், படம் தோல்வியடைந்தது.
தமிழில் மட்டுமின்றி, சமீபகாலமாக இந்தியில் கங்கனா நடித்த பல படங்கள் அவருக்கு தோல்வி படங்களாகவே இருக்கின்றன. தொடர் தோல்வி படங்களால் அவர் விரக்தியடைந்த நிலையில், சமீபத்தில் தயவு செய்து ரசிகர்கள், குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு வந்து சினிமாக்களை வாழ வையுங்கள் என கோரிக்கை விடுத்திருந்தார்.
கங்கனா ரனாவத் நடிக்கும் படங்கள் தொடர்ந்து பிளாப் ஆவதால், தயாரிப்பில் முதலீடு செய்தவர்கள் 10 சதவீதம் பணத்தை கூட திரும்ப பெற முடியாத நிலையில் உள்ளனர். இதனால் கங்கனா ரனாவத்துக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அரசியலில் குதித்துள்ள கங்கனா ரனாவத், வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக அவரது தந்தை உறுதிபடுத்தியுள்ளார். சினிமாவில் தொடர்ந்த தோல்வி, அரசியலில் வெற்றியாக மாறுமா என, பாலிவுட் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





