திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் ஆர் சுந்தர்ராஜன். இவர் சில டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் கடந்த 1980 90களில் இவர் ரஜினி விஜயகாந்த் மோகன் சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய முன்னணி டைரக்டர் என்பது இன்றைய இளம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாது.
குறிப்பாக பயணங்கள் முடிவதில்லை வைதேகி காத்திருந்தாள் அம்மன் கோவில் கிழக்காலே மெல்லத் திறந்தது கதவு குங்குமச்சிமிழ் நான் பாடும் பாடல் ராஜாதி ராஜா பங்காளி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் ஆர் சுந்தர்ராஜன். இப்போது பல படங்களில் அப்பா கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர். அப்போது ஆர் சுந்தர்ராஜன் பேசியதாவது, நடிகர் மோகன் ஹீரோவாக நடித்த நான் பாடும் பாடல் பயணங்கள் முடிவதில்லை குங்குமச் சிமிழ் மெல்லத் திறந்தது கதவு என 4 படங்களை இயக்கி இருக்கிறேன்.
இதில் எந்த படத்திலும் நடிகர் மோகனுக்கு நான் சண்டை காட்சி வைக்கவில்லை. சண்டைக்காட்சி தேவை என்று எனக்கு தோணவில்லை. அதனால் மெல்லத் திறந்தது கதவு படப்பிடிப்பு நடந்த போது இந்த படத்தில் கண்டிப்பாக எனக்கு இதில் சண்டைக்காட்சி இருக்க வேண்டும் என்று நடிகர் மோகன் அடம் பிடித்தார்.
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனிடம் இந்த படத்தில் ஒரு சண்டை காட்சியாவது இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை ஏவிஎம் சரவணனும் என்னிடம், மோகன் என்னமோ கேட்கிறார் என்று கூறினார். நான் மோகனிடம் அதுபற்றி கேட்ட போது இதுவரை உங்களது இயக்கத்தில் குங்குமச்சிமிழ் பயணங்கள் முடிவதில்லை நான்பாடும் பாடல் என நடித்து விட்டேன். எந்த படத்திலும் சண்டைக்காட்சி இல்லை. அதனால் இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று முடிவாக சொன்னார்.
அப்போது நான், தேவையில்லாமல் இந்த படத்தில் சண்டைக்காட்சி வைக்க முடியாது. எப்படி இருந்தாலும் இந்த படம் எடுத்து முடிவதற்குள் உனக்கும் எனக்கும் சண்டை வந்துவிடும். அப்புறம் எதற்காக தனியாக ஒரு சண்டைக்காட்சி வைக்க வேண்டும்? என்று கூறி மோகனை சமாளித்து நடிக்க வைத்து விட்டேன் என்று அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் ஜாலியாக பேசியிருக்கிறார்.





