தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை தேவயானி. குறிப்பாக 1990களில் தேவயானி நடித்த காதல் கோட்டை மறுமலர்ச்சி சூரியவம்சம் பிரண்ட்ஸ் தொடரும் போன்ற பல படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதனால் முன்னணி நாயகியாக தேவயானி வலம் வந்தார். மேலும் பல வெற்றிப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். பிறகு கோலங்கள் உள்ளிட்ட சில டிவி சீரியல்களிலும் தேவயானி நடித்தார். சமீபத்தில் அவர் இயக்கிய குறும்படம் ஒன்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போதும் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து சினிமாவில் தேவயானி நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர். அதன்பிறகு நீ வருவாய் என என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் காதலுடன் போன்ற படங்களை ராஜகுமாரன் இயக்கினார். இந்த 3 படங்களிலுமே தேவயானி தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் தேவயானிக்கும் ராஜகுமாரனுக்கும் காதல் ஏற்பட்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக இயக்குனர் ராஜகுமாரன் யூடியூப் சானல் நேர்காணல்களில் பங்கேற்று பரபரப்பாக பேசி வருகிறார். ஆனால் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசாமல் தமிழ் சினிமா நடிகர்கள் குறித்து தாறுமாறாக விமர்சனம் செய்கிறார்.
கூலி படத்துக்கு அந்த டைட்டில் வைத்தது தவறு. கூலி படம் நன்றாக இல்லை என்றால் அந்த படத்தின் டைட்டிலை வைத்தே கொச்சையாக விமர்சிப்பார்கள் என்று கூறியிருந்தார். மேலும் நடிகர் விக்ரமுக்கு மேக்கப் போடாமல் நடிக்கவே தெரியாது. சாமி படத்தில் ரஜினி கமல் போல நடித்திருந்தார். அவருக்கு தனிப்பட்ட முறையில் நடிப்பை வெளிப்படுத்த தெரியாது என்றும் கூறியிருந்தார். நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் எல்லா படங்களிலுமே கமல்ஹாசன் தான் தெரிவாரே தவிர அவரது கேரக்டர் தெரியாது என்றும் கூறியிருந்தார்.
அதேபோல் நடிகர் விஜய் குறித்தும் தாறுமாறாக பேசியிருந்தார். இப்படி தொடர்ந்து ராஜகுமாரன் பேசி வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படம் குறித்து பேசிய ராஜகுமாரன், இதெல்லாம் ஒரு படமே கிடையாது. ரொம்பவும் சாதாரணமான படம் என்று கூறியிருந்தார். இப்படி தொடர்ந்து ராஜகுமாரன் எல்லை மீறி பேசி வருவதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அவரை கேலி செய்யும் விதமான மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.





