விடாமுயற்சி திரைப்படத்திற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகி, படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும் தற்போது ரேசில் முந்தி இருக்கிறது குட் பேட் அக்லி திரைப்படம். கடந்த வாரம், ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அங்குள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தன்னை எப்போதும் அஜித் ரசிகராக காட்டிக் கொள்ளும் அவர், இந்த முறை அவரை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். இதற்குக் காரணம் அவர் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் தான்.
எஸ் ஜே சூர்யாவின் திறமையான நடிப்பு மற்றும் ஆதிக் ரவிச்சந்திரனின் குழப்பம் இல்லாத திரைக்கதையால் இந்த திரைப்படத்தின் வெற்றி ரசிகர்களால் உறுதி செய்யப்பட்டது. இப்படியான சூழலில் தான் அவர் அடுத்ததாக அஜித்தை வைத்து எடுத்து வருகிறார். இதனை தெலுங்கில் உள்ள மைத்திரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் முழுக்க முழுக்க அஜித்தையும் நெகட்டிவ் கதாபாத்திரமாக காண்பிக்க ஆதிக் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மை என்பதன் போலவே, படத்தின் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்தது. அதில் மூன்று கெட்டப்புகளில் அஜித்தை பார்க்க முடிந்தது. கலர் கலர் சட்டைகளில், நடு விரலைக் காட்டி நக்கலாக நின்று கொண்டிருந்தார் அஜித்.
இந்த நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அதன்படி முதலில், அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது. அதேபோல் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலாவும் குட் பேட் அக்லியில் இருப்பதாக சிலர் தெரிவித்தனர். அனிமல் ஹிந்தி படத்தில் மிரட்டிய பாபி தியோல் தான் படத்தின் வில்லன் என்று சொல்கிறார்கள்.
இப்படியான சூழலில் பிரேமலு படத்தில் ஹீரோவாக நடித்த, நஸ்லென் குட் பேட் அக்லியில் இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஆதிக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் தெலுங்கு நடிகர் சுனிலும் இதில் நடித்து வருவதாக சிலர் கூறுகிறார்கள். இருப்பினும் படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.





