சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார் என்பதை பலரும் அறிவார்கள். இந்த நிலையில் ஒரு பிரபல இயக்குனர் சரத்குமாரை புகழ்வதாக கூறிக்கொண்டு ரஜினிகாந்த் போன்ற பல டாப் நடிகர்களின் ரசிகர்களை வம்பிழுத்துள்ளார். அவர் யார்? அப்படி அவர் என்ன கூறினார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

“நீ வருவாய் என”, “விண்ணுக்கும் மண்ணுக்கும்”, “காதலுடன்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியவர் ராஜகுமாரன். இவர் நடிகை தேவயானியின் கணவரும் கூட. இவர் ஒரு இயக்குனர் மட்டுமல்லாது பல திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். குறிப்பாக சந்தானம் கதாநாயகனாக நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரைப்படத்தில் ஒரு காமெடி கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற யாரை வேண்டுமானாலும் சொல்லுங்கள், அவர்கள் எல்லாம் சரத்குமாரை விட பெரிய நடிகர்கள் கிடையாது. ஏனென்றால் சரத்குமார் நடிப்பில் மிக உயர்ந்தவர். கமல்ஹாசன் இல்லாமல் தமிழ் சினிமாவே இல்லை என்று கூட சொல்லலாம்.

ஆனால் சரத்குமாரா? கமல்ஹாசனா? என்று வரும்போது நான் சரத்குமாருக்குத்தான் ஓட்டு போடுவேன். ஏனென்றால் கமல்ஹாசன் நடித்திருக்கிறார் என்று எல்லா படங்களிலும் தெரியும். ஆனால் சரத்குமார் நடிக்கும் படங்களில் அப்படி இருக்காது. எங்கே சரத்குமார் நடித்திருக்கிறார் என்று உங்களால் சொல்லவே முடியாது. சரத்குமார் ஒரு அற்புதமான நடிகர். அவரை இங்குள்ள எந்த நடிகருடன் ஒப்பிட முடியாது” என அப்பேட்டியில் ராஜகுமாரன் பேசியுள்ளார். இது ரஜினி, கமல், விஜய் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.





