தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு எம் ராஜேஷ் என அடித்து சொல்லிவிடலாம். ஆனால் இதன்பிறகு அவருக்கு எந்த ஒரு வெற்றி திரைப்படங்களுமே அமையவில்லை என்பது இங்கு வேறு கதை. ஆனால் இவரின் முதல் மூன்று திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தையும் ஒரு உற்சாகத்தையும் கொடுத்தன.
சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம்தான் இயக்குனராக அறிமுகமானார் ராஜேஷ். ஜீவா கதாநாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கும் மிக முக்கியமான நகைச்சுவை கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகும் போது மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் என்ற டயலாக் மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது.
அதைத் தொடர்ந்து படமும் வெளியாக, திரையரங்குகளில் நகைச்சுவை பட்டாசு வெடித்தது. நாயகன் – நாயகிக்கு இடையே வரும் மோதல், பிறகு உருவாகும் காதல், இடையில் ஏற்படும் முறிவு, அதன் பிறகு கிளைமாக்ஸில் இணைவது என ஒரு சாதாரணமான டெம்ப்லேட்டை ராஜேஷ் கையில் எடுத்திருந்தாலும், சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் சொல்லப்பட்ட விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
காட்சிக்கு காட்சி நகைச்சுவை சீன்களை வைத்து அசத்தியிருந்தார் ராஜேஷ். இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மற்றொரு மிக முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. ஒவ்வொரு சீன்களிலும் பார்த்து பார்த்து தனது உழைப்பை கொட்டி இருப்பார் அவர். இதைத் தொடர்ந்து, பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தையும் ராஜேஷ் இயக்கி சிக்ஸர் விலாசினார்.
பிறகு மூன்றாவது முறையாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக அறிமுகம் செய்து, ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தை கொடுத்தார். இதுவும் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இதன் பிறகு தான் ராஜேஷிற்கு எந்த ஒரு திரைப்படமும் சொல்லிக் கொள்ளும் வகையில் அமையவில்லை. ஆல் இன் ஆல் அழகுராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, வணக்கம் டா மாப்ள என அவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் சொதப்பின.
அண்மையில் ரவி மோகனை வைத்து அவர் இயக்கியிருந்த பிரதர் திரைப்படமும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் அவர் தற்போது ஜீவாவை வைத்து சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஒரு அறிவிப்பு வீடியோவும் வெளியாகி உள்ளது. அதில் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் காட்சிகளும் தொடர்ந்து அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் நிச்சயம் அது சிவா மனசுல சக்தியின் இரண்டாவது பாகமாகதான் இருக்கும் என்று சொல்லி வருகிறார்கள்.





