தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு நல்ல படைப்பாளியாக இருப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ் தரமணி போன்ற படங்களை தந்தவர். இயக்குனர் ராமிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்தான் மாரி செல்வராஜ். அவரிடம் உதவியாளராக பல படங்களில் பணிபுரிந்த பிறகுதான் பரியேறும் பெருமாள் படம் மூலம் மாரி செல்வராஜ் இயக்குனராக மாறினார். முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக கர்ணன் மாமன்னன் வாழை போன்ற படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.
இப்போது நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த பைசன் காளமாடன் படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்து முடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு புதிய படத்தை மாரி செல்வராஜ் டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளது. வரலாற்று பின்னணியில் இந்த படம் உருவாக உள்ளது.
முன்னணி இயக்குனராக வெற்றி பெற்ற நிலையிலும் மாரி செல்வராஜ் தனது குருநாதரான இயக்குனர் ராமுக்கு எப்போதும் அவருக்கான மரியாதையை அவர் தந்து கொண்டே இருக்கிறார். ராம் படங்கள் சம்பந்தப்பட்ட விழாக்களில் நிகழ்ச்சிகளில் முன்னால் நின்று அது சார்ந்த பணிகளை ஏற்பாடுகளை கவனிப்பார். சென்னையில் நடந்த பறந்து போ பட விழாவிலும் இயக்குனர் மாரி செல்வராஜ் பல ஏற்பாடுகளை முன்னின்று கவனித்தார்.
அந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது, இயக்குனர் ராம் சாரிடம் ஆரம்பத்தில் பணி செய்த போது மிகவும் வெள்ளந்தியாக இருந்தேன். தங்க மீன்கள் படத்தில் அவரிடம் உதவியாளராக இருந்தபோது ஊரில் என் அப்பாவுக்கு பாம்பு கடித்துவிட்டது. அதைக் கேட்டு நான் அழுதேன். உடனே திருநெல்வேலிக்கு பிளைட்டில் செல்ல ராம் சார் டிக்கெட் போட்டு கொடுத்தார். என்னிடம் பாஸ்போர்ட் இல்லையே என்று நான் கலங்கினேன்.
அதற்கு அவர் திருநெல்வேலிக்கு போக பாஸ்போர்ட் தேவை இல்லை என்று சொன்னார். இப்போது ஒரு இயக்குனராக வளர்ந்திருக்கிறேன். சமீபத்தில் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சென்றேன். அங்கே என் மகன் தொலைந்து போக அப்பவும் நான் ராம் சாரை தான் நினைத்தேன். என் மகனுக்கு ஐஸ்கிரீம் தேவை என்றால் ராம் சார் ஆபீஸ்க்கு கூட்டிட்டு போ என்பான். என்னை போலவே என் மகனிடம் அவர் பாசமாக இருக்கிறார்.
ராம் சாருக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம். காமெடி படங்களை தான் மிகவும் விரும்பி பார்ப்பார். ஒரு கட்டத்தில் களவாணி படத்தை பார்த்துவிட்டு நீ இந்த மாதிரி ஒரு காமெடி படம் எடு என்று என்னிடம் சொல்லி இருக்கிறார். பறந்து போ படத்தில் நிறைய காமெடி இருக்கிறது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் பறந்து போ பட விழாவில் பேசியிருக்கிறார்.





