தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கிய முதல் படம் கற்றது தமிழ் படத்தில் அஞ்சலி அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு என பல ஹீரோக்களுடன் அஞ்சலி நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
குறிப்பாக தமிழில் அஞ்சலி நடித்த அங்காடித் தெரு எங்கேயும் எப்போதும் சகலகலா வல்லவன் மதகஜ ராஜா தூங்கா நகரம் தம்பி வெட்டோத்தி சுந்தரம் கருங்காலி கலகலப்பு நாடோடிகள் 2 இறைவி மங்காத்தா வத்திக்குச்சி என பல படங்கள் அவருக்கு நல்ல படங்களாக அமைந்தன. அவரது நடிப்பும் சிறப்பான பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ என்ற படத்திலும், ஏழுகடல் ஏழுமலை போன்ற படங்களிலும் அஞ்சலி நடித்திருக்கிறார். அதே போல் ராம் இயக்கிய தரமணி பேரன்பு போன்ற படங்களிலும் நடிகை அஞ்சலி நடித்திருந்தார். இப்படி தொடர்ந்து தனது படங்களில் நடிகை அஞ்சலி நடிப்பது குறித்து சமீபத்திய விழா ஒன்றில் இயக்குனர் ராம் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
பறந்து போ படத்தின் பிரமோ விழாவில் இயக்குனர் ராம் பேசியதாவது, என்னுடைய படங்களில் தொடர்ச்சியாக ஏன் அஞ்சலி நடிக்கிறார் என்று கேட்கிறார்கள். கற்றது தமிழ் படத்தில் நான் அவரை அறிமுகப்படுத்தினேன். அந்த சமயத்தில் மகாராஷ்டிராவில் படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு அடிபட்டது. இன்று வரை அந்த விபத்து குறித்து அவர் வெளியில் சொல்லவில்லை.
நான் இயக்கிய தரமணி பேரன்பு படங்களில் கமர்சியல், வியாபார விஷயங்களுக்காக ஒரு ஹீரோயின் வேண்டும் என்றபோது நான் அஞ்சலிக்கு தான் போன் செய்தேன். ஏழு கடல் ஏழுமலை படத்திலும் அது நடந்தது. பறந்து போ படத்தில் ஒரு தமிழ் ஹீரோயின் வேண்டும் என ஹாட் ஸ்டார் சொன்ன போதும் அஞ்சலிக்கு தான் போன் செய்தேன்.
சின்ன கேரக்டர் கௌரவ வேடம். தனக்கு செட் ஆகாத கேரக்டர் என்றாலும் அவர் எனக்காக நடித்துக் கொடுக்கிறார். என் வீட்டில் என் மகள், மகன் மாதிரி அவரும் ஒரு உறுப்பினர் என்று இயக்குனர் ராம் அந்த விழாவில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். நடிகை அஞ்சலியை தன் வீட்டில் ஒருவர். அதுவும் மகன், மகளை போன்று தனது குடும்ப உறுப்பினர் என்று இயக்குனர் ராம் பாசமாக கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.





