கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வௌியான படம் மூக்குத்தி அம்மன். மிகப்பெரிய வெற்றிப் படமாக இது இருந்தது. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக, நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இதில் ஊடகத்துறை சார்ந்தவர் கேரக்டரில் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார்.
சாமியார் ஒருவர் வனத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, வளைத்து போட்டு ஆசிரமம் நடத்தி வருவார். ஆனால் மக்கள், அவரை கடவுளின் அவதாரமாக நினைத்து அவர் சொல்வதுதான் உண்மை என்று நம்பி வருகிற சூழலில், ஆர்ஜே பாலாஜி அவரது வண்டவாளங்களை எல்லாம் மக்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுதான் இந்த படத்தின் மையக்கதை.
இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியின் அம்மா கேரக்டரில் ஊர்வசி, தனது சிறந்த நடிப்பை வௌிப்படுத்தி இருப்பார். மூக்குத்தி அம்மனாக நயன்தாரா வரும் காட்சிகளும், அதில் கடவுள் நம்பிக்கை குறித்து அவர் சொல்லும் சில விஷயங்களும் ஆன்மிகம் சார்ந்த பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்திருந்ததால், இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.
வெற்றி பெற்ற படங்களை எல்லாம் 2ம் பாகமாக எடுக்கும் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சீசனில், மூக்குத்தி அம்மன் படமும் 2ம் பாகமாக எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தை இயக்க, மீண்டும் ஆர்ஜே பாலாஜி தயாராகி விட்டார். மீண்டும் அவரே படத்தின் நாயகனாக நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கவில்லை. அந்த கேரக்டரில் 2ம் பாகத்தில் திரிஷா நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
வழக்கமாக ராமநாராயணன் போன்ற சில இயக்குனர்கள்தான், தொடர்ந்து பக்தி படங்களை டைரக்ட் செய்வார்கள். பாம்பு, குரங்கு, யானை போன்றவைகளை வைத்து ரம்யாகிருஷ்ணன், கௌசல்யா, மீனா, ரோஜா போன்றவர்களை நாயகிகளாக நடிக்க வைத்து, ஒரு கட்டத்தில் அவர்களை அம்மனாக காட்டி ரசிகர்களுக்கு பரவசம் நிறைந்த பக்தி படங்களை தருவது வழக்கமாக இருந்தது.
ஆனால் இப்போது ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து, அதன் 2ம் பாகம் படத்தை எடுக்கவும் ஆயத்தமாகி விட்டார். இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா நடிக்கும் நிலையில், இந்த படத்துக்கு மாசாணி அம்மன் என டைட்டில் வைக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த அம்மன் தலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





