தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. செம்பருத்தி படம் மூலம் நடிகை ரோஜாவை அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு அவரது இயக்கத்தில் பல படங்களில் நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் அவரையே காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஆர்கே செல்வமணி ரோஜா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
தமிழில் பல முக்கிய வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி. குறிப்பாக புலன் விசாரணை கேப்டன் பிரபாகரன் மக்கள் ஆட்சி அரசியல் அதிரடிப்படை ராஜமுத்திரை என பல வெற்றிப் படங்களை இயக்கியவர். இவரது படங்கள் பெரும்பாலும் நிகழ்கால அரசியலை பேசியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்கே செல்வமணி இப்போது தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற சினிமா தொழிலாளர்களின் அமைப்பான பெப்சி தலைவராகவும் இருந்து வருகிறார். அந்த காலத்திலேயே பரபரப்பாக பேசப்பட்ட ஆட்டோ சங்கர், சந்தன கடத்தில் வீரப்பன் போன்றவர்களின் கதைகளை படமாக எடுத்து, ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்பட்டவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர் கே செல்வமணி பேசியதாவது, ஒரு படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒவ்வொரு படமும் இயக்குனருக்கு குழந்தை மாதிரி. நடிகர்களும் நடிகைகளும் ஒரு கட்டத்துக்கு மேல் அதாவது வளர்ந்துவிட்ட பிறகும் பழைய மாதிரி அன்புடனும் மரியாதைனும் நட்பாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும்.
நடிகரோ நடிகையோ யாராக இருந்தாலும் மேனேஜர்கள் மூலமாக கதைகளை கேட்காதீர்கள். இயக்குனர்கள் எழுத்தாளர் மூலமாக கதையை கேளுங்கள். என்றைக்கு மேனேஜர்கள் உதவியாளர்கள் மூலமாக நடிகர்கள் கதைகள் கேட்க தொடங்கினார்களோ அப்போதே சினிமா மோசமாகிவிட்டது. கதை கேட்கும் இடத்தில் சினிமாவில் தோல்வியடைந்தவர்கள் தான் இருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை. தனக்கு சலாம் அடிப்பவர்களை மட்டுமே அவர்கள் ஹீரோக்களிடம் அழைத்துச் செல்கிறார்கள். எனவே பழையபடி சினிமா இருக்க வேண்டும். நடிகர் நடிகைகளுடன் தொழில்நுட்ப கலைஞர்கள் நேரடி நட்பாக இருக்க வேண்டும். அந்த நட்பு இல்லாவிட்டால் படங்கள் ஜெயிக்காது என இயக்குனர் ஆர் கே செல்வமணி பேசியிருக்கிறார்.





