தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. ரஜினிகாந்த் விஜய் அஜித் சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள அவர், லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி ஆரம்ப காலகட்டத்தில் வெளியான கோலமாவு கோகிலா அறம் மாயா உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
ஆனால் அதன்பிறகு நயன்தாரா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஐரா, நெற்றிக்கண், ஓ2, கொலையுதிர் காலம், கனெக்ட் போன்ற திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் ஓடிப் போயின. இது மட்டுமல்லாமல் சமீப காலமாக அவர் கதாநாயகர்களுடன் நடித்த திரைப்படம் மூலம் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை.
இறைவன், ஜவான், கோல்ட், காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த, தர்பார் போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்தன. இப்படியான சூழலில்தான் நயன்தாராவிற்கு 75 வது திரைப்படம் ஆக, அன்னபூரணி படம் வெளியானது. இதில் பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பெண், எப்படி சமையல் கலைஞராக ஆகிறார் என்பதை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டது.
கடந்த மாதம் ஒன்றாம் தேதி வெளியான இந்த திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து netflix ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியானது. ஆனால் இது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி, மகாராஷ்டிராவில் ஒரு அமைப்பினர் புகார் கொடுத்தனர். மேலும் அவர்கள் இது லவ் ஜிகாத்தை தூண்டுவதாகவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை அறிந்த தயாரிப்பு நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கூறியது. மேலும் சர்ச்சைக்கு உள்ளான அந்த காட்சிகள் நீக்கப்படும் வரை, ஓடிடி தளத்திலிருந்து அன்னபூரணி படத்தை நீக்குவதாகவும் அறிவித்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு தரப்புக்கு இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியான சூழலில் தான் நடிகை நயன்தாரா இந்த விஷயத்தில் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெய் ஸ்ரீ ராம் என்றே ஆரம்பித்திருக்கிறார். கனத்த இதயத்துடன் இந்த அறிக்கையை வெளியிட விரும்புகிறேன். அன்னபூரணி திரைப்படத்தை உள்ள நல்ல கருத்துடன் மக்களிடம் கொண்டு போய் செல்லும் திரைப்படமாகத் தான் நான் பார்த்தேன். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு, திரையரங்குகளில் வெளியான ஒரு திரைப்படம் ஓடிடி தளத்தில் நீக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தில் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னபூரணியின் உண்மையான நோக்கம் உத்வேகம் தானே தவிர யாரையும் புண்படுத்துவது அல்ல என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிக்கை தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.





