இயக்குனர் பாலு மகேந்திராவின் பட்டறையில் இருந்து வெளிவந்த தரமான இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. தனது குருநாதரை போலவே மென்மையான கதை களத்தையும், யதார்த்தமான காட்சிகளையும் கொடுப்பதில் வல்லவரான சீனு ராமசாமி, 2007 ஆம் ஆண்டு வெளியான கூடல்நகர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
பரத் இரண்டு கதாபாத்திரங்களின் நடித்திருந்த இந்த திரைப்படம், படு தோல்வியை சந்தித்தது. இதன் பிறகு தனது ரூட்டை கெட்டியாக பிடித்த சீனு ராமசாமி, தென்மேற்கு பருவக்காற்று என்னும் திரைப்படத்தை எடுத்து அதில் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகம் ஆக்கினார். தேனி மாவட்டத்தை களமாக கொண்டு, ஆட்டு திருட்டு கும்பலை பற்றிய கதையாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதேசமயம், சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை தென்மேற்கு பருவக்காற்று பெற்றதால், பலராலும் கவனிக்கப்பட்டார் சீனு ராமசாமி. இதன் பிறகு விஷ்ணு விஷாலை வைத்து நீர் பறவை படத்தை எடுத்தார் இயக்குனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், முதல் முறையாக சீனு ராமசாமி படத்திற்கு நல்ல வசூலையும் கொடுத்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து தர்மதுரை படத்தை இயக்கினார் சீனு ராமசாமி. விஜய் சேதுபதி திரை உலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்னவென்றால் அது நிச்சயம் தர்மதுரை ஆக தான் இருக்கும். தெளிந்த நீரோடையில் செல்வது போல் கதைக்களத்தை அமைத்து அதில் வெற்றி பெற்ற இயக்குனர், தர்மதுரையால் எங்கும் பாராட்டைப் பெற்றார்.
இதன் பிறகு உதயநிதி ஸ்டாலினை வைத்து கண்ணே கலைமானே, விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் ஆகிய திரைப்படங்களை சீனு ராமசாமி இயக்கினார். இதில் மாமனிதன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், சர்வதேச அளவில் பல விருதுகளை அள்ளியது. இப்போது வரை அந்தப் படத்தை பலரும் பாராட்டிக் கொண்டிருக்க, மாமனிதன் படம் பற்றி பல்வேறு தகவல்களை சீனு ராமசாமி பகிர்ந்து உள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், “மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதிக்கு முன்னதாக அஜித்தை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன். அவரது உருவம், மென்மையான உரையாடல், அன்பை கண்ணில் காட்டும் விதம், அவரது குரலில் பேசும்போது ஒரு உருக்கம் இருக்கும். இதனால்தான் அவரை மாமனிதனின் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போதும் கூட அஜித்துக்கு ஒரு கதை தயார் செய்து வருகிறேன். சூர்யாவுக்கும் ஒரு கதை எழுதி இருக்கிறேன். தனுஷிற்கும் ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பிக்கும்போது இப்படித்தான் இருக்கும்” என்று கூறினார்.





