தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் எம்எஸ் பாஸ்கர். ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் எம்எஸ் பாஸ்கர் தனது அழுத்தமான நடிப்பால் தனி முத்திரை பதித்தார்.
ஒரு கட்டத்தில் எம்எஸ் பாஸ்கரின் சிறந்த நடிப்பு திறமையை உணர்ந்து கொண்ட இயக்குனர்கள் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து அதற்கு எம்எஸ் பாஸ்கரை நடிக்க ஒப்பந்தம் செய்தனர். அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் பார்க்கிங். இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார்.
பார்க்கிங் படத்தில் எம்எஸ் பாஸ்கர் வில்லத்தனமான நடிப்பில் ஒரு அசத்தலான கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசின் சிறந்த துணை நடிகர் தேசிய விருது நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எம் எஸ் பாஸ்கருக்கு தமிழ் சினிமா சார்ந்தவர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த 71வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கரங்களால் நடிகர் எம்எஸ் பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதேபோல் மலையாள நடிகர் மோகன் லாலுக்கு தாதா சாகிப் பால்கே விருதும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் வாத்தி படத்தில் இசையமைத்ததற்காக ஜீவி பிரகாஷ் குமாரும் தேசிய விருது பெற்றார். உள்ளொழுக்கு என்ற மலையாள படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கும் சிறந்த துணை நடிகை விருது வழங்கப்பட்டது. இதையடுது்து டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர் பெற்ற தேசிய விருதுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார்.
அங்குள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் விருதை வைத்து தலைவணங்கி மரியாதை செலுத்தினார். அங்கு இருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை நடிகர் எம்எஸ் பாஸ்கர் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு பிரேமலதா வாழ்த்துகளை தெரிவித்தார். சினிமாவில் எம்எஸ் பாஸ்கர் நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் விஜயகாந்த் தனது படங்களில் அவருக்கு நடிக்க அதிகமாக வாய்ப்பு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





