இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் செல்வராகவன். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். புதுப்பேட்டை 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். சமீபமாக படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ராயன் படத்தில் செல்வராகவன் நடிப்பு ரசிகர்களின் அதிக கவனத்தை பெற்றது இப்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தை 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இவர் நடிகர் தனுஷின் சொந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடிகர் தனுஷூம் தனது அப்பா போல, அண்ணன் போல இயக்குனராகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் செல்வராகவன் அடிக்கடி சமூக வலைதளங்களில் ஏதேனும் சில கருத்துக்களை வெளியிட்டு வருவது வழக்கமாக உள்ளது. அது அவரது சொந்த வாழ்க்கை சம்பவங்களாக இருக்கும் அல்லது சமூகம் சார்ந்த கருத்துகளையும் அவர் அவ்வப்போது வீடியோவாக வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள ஒரு மீடியாவில் செல்வராகவன் கூறியிருப்பதாவது, உலகம் முழுக்க பார்த்தால் வாழ்க்கையில் இந்த இரண்டையும் முயற்சிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒன்று தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன்.
நான் இதுவரை 7 முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். ஒவ்வொரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்யும்போதும் எனக்குள் ஒரு குரல் கேட்கும். ஏதோ சொல்வது மாதிரி, ஏதோ கேட்கிற மாதிரி இருப்பதை உணர்வேன். நம்மிடத்தில் கடவுள்தான் ஏதோ சொல்கிறார் என்று நினைத்து தற்கொலை முயற்சியை கைவிட்டு விடுவேன். ஒரு ஆறு மாதம் ஒரு வருடம் கழித்து வாழ்க்கையில் திடீரென்று மகிழ்ச்சியும் அமைதியும் ஏற்படும்.
அப்போது நாம் தற்கொலை செய்து இருந்தால் இந்த சந்தோசத்தை இழந்திருப்போமே என்று நினைத்துக் கொள்வேன். வாழ்க்கையில் இதுதான் தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களின் உண்மையான நோக்கம். அடுத்த ஜென்மத்தில் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பிறந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று நினைப்போம்.
ஆனால் கூவத்தில் பிறந்து பன்றியாகவோ காட்டில் மரத்தில் தொங்கும் பேயாக பிறந்தால் யார் என்ன செய்ய முடியும். நமக்குள் கேட்கும் குரல் கடவுளின் குரலாகவோ அல்லது வேறு நபரின் குரலாக கூட இருக்கலாம். அதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் அந்த குரல் உங்களுக்குள் கேட்காமல் இருக்காது. அது உண்மையானது என்று அந்த வீடியோவில் செல்வராகவன் கூறியிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.





