இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். இவரும் திரைப்பட இயக்குனர். இப்போது நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். நடிகர் தனுஷ் செல்வராகவனின் தம்பி என்பது அனைவரும் அறிந்த தகவல்தான். இயக்குனர் செல்வராகவன் நடிகரானது போல நடிகர் தனுஷூம் இப்போது இயக்குனராகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
7ஜி ரெயின்போ காலனி படத்தை செல்வராகவன் இயக்கிய போது அந்த படத்தில் நடித்த நடிகை சோனியா அகர்வாலுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். 4 ஆண்டுகள் மட்டுமே அவர்களது குடும்ப வாழ்க்கை நீடித்த நிலையில் இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர்.
அதன்பிறகு செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை 2வது திருமணம் செய்துக்கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் தனது 2வது மனைவி கீதாஞ்சலியையும் செல்வராகவன் பிரிய இருப்பதாக சமீபத்தில் இணையத்தில் தகவல் பரவியது. இதற்கு செல்வராகவன் கீதாஞ்சலி இருவருமே இதுவரை மறுப்போ விளக்கமோ தரவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, நான் இதை ரொம்ப நாளாக உங்களிடத்தில் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது கொஞ்சம் சென்சிட்டிவானதாக இருக்கலாம் அல்லது ரொம்பவும் சென்சிட்டிவ்வானதாகவும் இருக்கலாம்.
இது உங்களில் பலருக்கு நடந்திருக்கலாம். ஒரு 3 ஆண்டுகளுக்கு முன்பு என் வாழ்க்கையில் நடந்த பெரும் துயரம் இது. இந்த துயரத்தை என்னால் தாங்கவே முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் அழவில்லை. ஆனால் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. மனதுக்கு இது கடவுள் கொடுத்தது தான் என்று நான் நினைத்துக் கொண்டாலும் கடவுளே எனக்கு ஏன் இப்படி சோதனைகளை கொடுக்கிறாய் என்றெல்லாம் நான் கேட்டிருக்கிறேன்.
ஆனால் இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டுக்கு பின்பு எனக்கு மற்றொரு சம்பவம் நடக்கும்போது இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை எனக்கு ஏற்படுத்த தான் கடவுள் எனக்கு அப்படி ஒரு துயரத்தை கொடுத்து என்னை தயார்படுத்தி உள்ளார் என்றும் நான் நினைக்கிறேன். உங்களுக்கும் இதுபோல ஏதாவது துயரம் ஏற்படுகிறது என்றால் உங்களை வலிமை ஆக்கத்தான் கடவுள் இவ்வாறு செய்கிறார் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று அந்த வீடியோவில் இயக்குனர் செல்வராகவன் கூறியிருக்கிறார். ஒருவேளை தனது 2வது திருமண வாழ்க்கை குறித்து தான் இப்படி பூடமாக சொல்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





