தமிழ் சினிமாவில் 1990களில் பிரமாண்ட இயக்குனர் என்று புகழப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில் மேன் துவங்கி கேம் சேஞ்சர் படம் வரை 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை 15 மட்டுமே. இதில் நாயக் என்ற இந்தி படமும், கேம் சேஞ்சர் என்ற நேரடி தெலுங்கு படமும் அடங்கும். இந்த 15 படங்களில் கடைசியாக வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
வழக்கமாக ஷங்கர் படங்கள் என்றாலே அரசியல் லஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோகம் போன்ற விஷயங்களை தனது படங்களில் மையப்படுத்தி பேசுவார். ஆனால் அதே நேரத்தில் அந்த விஷயங்களை நியாயப்படுத்துகிற உண்மையான யதார்த்தமான காட்சிகளையும் படத்தில் காட்டி விடுவார்.
அவரது படங்களில் கமர்ஷியல் பிரமாண்டம் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே போல் தொழில்நுட்பங்களிலும் அவர் கைதேர்ந்த ஒரு இயக்குனராக தன்னை நிரூபித்து வருகிறார். குறிப்பாக எந்திரன் 2.0 படங்களில் தொழில்நுட்ப காட்சிகள் மிரள வைத்திருக்கும். அதுவும் 2.0 படத்தில் செல்போன்கள் பறந்து செல்வது, செல்போன் பறவை செல்போன் மனிதன் என விஎப்எக்ஸ் தொழில்நுட்ப காட்சிகளில் ரசிகர்களை ஷங்கர் மிரட்டி இருந்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர் தனது படத்தில் இடம்பெறும் தொழில்நுட்ப காட்சிகள் குறித்து கூறியதாவது, ரஜினி நடித்த 2.0 படத்தில் ராட்சத பறவை ஒன்று வருகிறது. படத்தின் மிக முக்கியமான ரோல் அது. அந்த பறவையை விஎப்எக்ஸ் முறையில் உருவாக்க ஓராண்டு காலம் அந்த தொழில்நுட்ப நிறுவனத்துக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. அதற்காக நாங்கள் ஓராண்டு காத்திருக்க நேர்ந்தது.
அப்படி ஓராண்டுக்கு காத்திருக்காமல் டம்மியாக ஒரு பறவையை காட்டினால் அது மொத்த படத்தையும் பாதித்து விடும். அதுமட்டுமின்றி இப்போது ரசிகர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். சமகாலத்தில் வருகிற ஆங்கில படங்கள் பெரிய பெரிய ஹாலிவுட் படங்களை எல்லாம் அவர்கள் பார்க்கின்றனர். பெரிய பட்ஜெட் படங்களை, பெரிய சிஜி ஒர்க் பண்ணிய படங்களை எல்லாம் அவர்கள் பார்த்து விடுகின்றனர்.
அவர்களிடம் போய் நாம் சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. ஏங்க இது இந்திய படம்ங்க, இது ஒரு தமிழ் படம்ங்க, இதுக்கு மேல இந்த படத்துக்கு பட்ஜெட் போட முடியாதுங்க. அது ஹாலிவுட் படம்ங்க. வோர்ல்டு மார்க்கெட். அவ்வளவு பட்ஜெட் எல்லாம் நம்ம தமிழ் படத்துல போட முடியாதுங்க என்றெல்லாம் ரசிகர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது, என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





