தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரும் உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் சிவாஜி அந்நியன் முதல்வன் பாய்ஸ் நண்பன் ஜென்டில்மேன் காதலன் ஜீன்ஸ் போன்ற பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன.
ஆனால் சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் மட்டும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் இந்தியன் 3 படம் அந்த தோல்விக்கு பதில் சொல்லும் விதமாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்று இயக்குனர் ஷங்கர் கூறியிருக்கிறார். இதையடுத்து மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற நாவலை படமாக்கவும் இயக்குனர் ஷங்கர் ஆயத்தமாகி வருகிறார்.
இதற்கிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இதில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார். எஸ்ஜே சூர்யா வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியாகிறது.
கேம்சேஞ்சர் படத்தின் பிரமோஷன் பணி விறுவிறுப்பாக இப்போது நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள டல்லாஸில் நடந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் கதாநாயகன் ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான சிரஞ்சீவி மகேஷ்பாபு மற்றும் பிரபாஸ் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த மாஸ் ஹீரோக்கள் குறித்து இயக்குனர் ஷங்கர் பேசுகையில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று 15 ஆண்டுகளாக கனவு கண்டேன். ஆனால் அது இன்று வரை நிறைவேறவில்லை. பின்னர் நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்து பணி செய்ய திட்டமிட்டேன். ஆனால் அந்தத் திட்டமும் எனக்கு கைகூடவில்லை.
கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் பிரபாஸ் உடன் ஒரு படம் இயக்குவது குறித்து பேசினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அதுவும் நிறைவேறவில்லை என்று தனது வருத்தத்தை கூறியிருக்கிறார். அதே நேரத்தில் இப்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த படம் பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றால் அந்த 3 நடிகர்களும் ஷங்கரை படம் இயக்க அழைப்பது தானாக நடக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.





