தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நடிகரான போது ஒல்லிப்பிச்சான் நடிகர் என்று உருவக்கேலி செய்யப்பட்டவர்தான் நடிகர் தனுஷ். ஆனால் தனது திறமையாலும் அசராத உழைப்பாலும் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். கடந்தாண்டில் அவரது 50வது படம் ராயன் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது.
தனது 50வது படத்தை நடிகர் தனுஷே இயக்கி இருந்தார். மேலும் இதுவரை ப பாண்டி ராயன் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற 3 படங்களை தனுஷ் இயக்கி உள்ளார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் இட்லிகடை என்ற படமும் உருவாகி உள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக இருந்த அந்த படம், அஜீத்குமார் நடித்த குட்பேட் அக்லி படம் ரிலீஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நடிகராக பாடகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக இயக்குனராக தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ள நடிகர் தனுஷ் இப்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். அடுத்து இளையராஜா பயோபிக் படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கிடையே தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா நடித்த குபேரா படம் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸாக உள்ளது.
தெலுங்கில் முன்னணி இயக்குனராக உள்ள சேகர் கம்முலா தனுஷ் நடித்த குபேரா படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சேகர் கம்முலா கூறியதாவது, குபேரா படத்தை இயக்கியதை பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தின் கதை தனுஷ் ராஷ்மிகா மந்தனா நாகர்ஜூனா போன்ற நடிகர்களை கேட்டது.
குபேரா படம் வெளியான பின் அந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக ஆச்சரியப்படுவார்கள். எனது படங்களில் பொதுவாக நான் எந்த மெசேஜூம் சொல்வது இல்லை. அதே நேரத்தில் நாட்டில் உள்ள சமுதாய கட்டமைப்பை பாதிக்காத வகையில் தான் எனது படங்களும் இருக்கும். இதை நான் மனதில் வைத்தே ஒவ்வொரு படத்திலும் நான் கதை எழுதுவேன் என இயக்குனர் சேகர் கம்முலா கூறியிருக்கிறார்.
இயக்குனர் சேகர் கம்முலா சொல்வது போல் குபேரா படம் மிக வித்யாசமான கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் பெரிய பணக்காரனாக மாறுவதே குபேரா என டைட்டில் குறியீடாக சொல்லப்பட்டிருக்கிறது. நிச்சயமாக வேற லெவல் சம்பவமாக, மாறுபட்ட படமாக குபேரா இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.





