சொந்த சரக்கு கொஞ்சமும் இல்லாமல் பழைய படங்களை அல்லது வேறு மொழி படங்களின் கதைகளை காட்சிகளை மையக் கருக்களை காப்பியடித்து படம் எடுப்பதில் தமிழ் பட இயக்குனர்கள் சிலர் கில்லாடிகளாக உள்ளனர். அதில் முதல் பெஞ்சில் இருப்பவர் தான் இயக்குனர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கிய முதல் படம் ராஜா ராணி படம் வெளியான போது அது மணிரத்னம் இயக்கிய மௌனராகம் கதை என்று பலரும் விமர்சித்தனர். அதே போல் தெறி படத்தை விஜயகாந்த் நடித்த சத்ரியன் என்றும் மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் என்றும் சக்தே இந்தியா படம்தான் பிகில் என்றும் அப்போதே ரசிகர்கள் கண்டுபிடித்து அட்லியை ட்ரோல் செய்து கலாய்த்தனர்.
அடுத்து இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் தமிழில் வெளியான 28 படங்களில் இருந்து உருவி எடுக்கப்பட்ட காட்சிகளின் மொத்த தொகுப்பு என்றும் ரசிகர்கள் விமர்சித்தனர். ஆனால் அந்த படம் 1150 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் ஜெராக்ஸ் மன்னன் அட்லி இன்று, 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இந்திய நட்சத்திர இயக்குனராக மாறிவிட்டார்.
இந்நிலையில் ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் 22வது படத்தை இயக்குனர் அட்லி தனது 6வது படமாக இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இது சயின்ஸ்பிக்சன் கதை என்றும் சொல்லப்படுகிறது. இதில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சூழலில் இந்த படத்தின் தலைப்பு போஸ்டருடன் வெளியாகி உள்ளது. இந்த படத்துக்கு ராக்கா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அந்த டைட்டிலுடன் வெளியான போஸ்டரில் ராட்சத தோற்றத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் காணப்படுகிறார். இது ஷங்கர் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த ஐ படத்தில் என்னோடு நீ இருந்தால் என்ற பாடல் காட்சியில் வரும் ராட்சத உருவம் கொண்ட கெட்டப் போலவே உள்ளது.
பியூட்டி அண்ட் தி பீஸ்ட் என்ற படத்தின் மையக்கருவில் தான் ஐ படத்தை ஷங்கர் உருவாக்கி தமிழில் தந்திருந்தார். இப்போது அதே கெட்டப்பில் ராக்கா பட போஸ்டரில் அல்லு அர்ஜூன் இருப்பதால், இயக்குனர் அட்லி தனது குருநாதர் மடியிலேயே கடைசியில் கை வைத்து விட்டார். அவரது ஐ படத்தையே சுட்டுவிட்டார் என்றும் ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தை தனது 18 வருட கனவு என்று அட்லி சொல்லியிருப்பதால் படம் வந்தால்தான் அது என்ன கனவு என்று ரசிகர்களுக்கு முழுமையாக தெரிய வரும்.





