தனது திருமணம் தொடர்பான டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் படக் காட்சிகளை பயன்படுத்த முடியாதது குறித்து, நடிகர் தனுசை கடுமையாக சாடி இருந்தார் நயன்தாரா. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி திருமணம் தொடர்பான டாக்குமென்ட்ரி, netflix ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதற்காக ஒரு கணிசமான தொகையை இந்த தம்பதி பெற்றிருக்கிறது. இப்படியான சூழலில் தான், தனுஷ் குறித்து கடுமையாக விமர்சித்து நீளமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் தங்களது டாக்குமென்ட்ரி இரண்டு ஆண்டுகள் காலதாமதமானதற்கு தனுஷ் தான் காரணம் என்று பேசி இருக்கிறார்.
உங்களுக்காக காத்திருந்து காத்திருந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், பிறர் துன்பத்தை பார்த்து சிரிக்கும் குணம் கொண்டவர் தனுஷ் என்றும் அவர் மறைமுகமாக கூறியிருந்தார். கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார் என்றும் அவரது பேச்சில் கடுமை இருந்தது.
இதேபோல் தனுஷின் முந்தைய நிகழ்ச்சிகளில் பேசிய வீடியோவை ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், வாழு வாழ விடு என்று கூறுவது சில அப்பாவி ரசிகர்களுக்காக மட்டுமே மனிதர்கள் மாற வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். பிறகு சிறிது நேரத்தில் அந்த ஸ்டேட்டஸையும் அவர் டெலிட் செய்து விட்டார்.
இப்படியான சூழலில் தான் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு எதிராக இயக்குனர் எஸ் எஸ் குமரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், நீங்கள் எடுக்க இருக்கும் எல்ஐசி தலைப்பு என்னுடையது. இந்த தலைப்பும், அதற்கான கதையும் என்னிடம் இணக்கமாக இருந்ததால் நான் அதை வழங்க முடியாது என்று கூறியிருந்தேன். ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொண்டீர்கள்.
உங்களைவிட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடங்கள் காத்திருந்து அனுமதி கேட்கும் உங்களுக்கு சிறிய படைப்பாளிகள் என்றால் ஏளனமாக தெரிகிறதா. இப்போது வரை அந்த தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதனிடையே விக்னேஷ் சிவனுக்கும் அந்த எல்ஐசி தலைப்பு உருப்படியாக இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் வழக்கு தொடர்வோம் என்று கூறியதால் தனது தலைப்பை எல்ஐகே என்று அவர் மாற்றிவிட்டார்.





