துரோகி இறுதிச்சுற்று சூரரைப் போற்று படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பராசக்தி. நடிகர்கள் சிவகார்த்திகேயன் ரவி மோகன் அதர்வா மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் மிக மோசமான விமர்சனங்களை கூறியதால் பராசக்தி படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெறவில்லை.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா, விஜய் ரசிகர்கள் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று கூறியிருந்தார். மேலும் விஜய் ரசிகர்களை ரவுடிகள் குண்டர்கள் என்றும் மறைமுகமாக அவர் விமர்சனம் செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. மொக்கை படத்தை எடுத்த இயக்குனர் சுதா கொங்கரா, விஜய் ரசிகர்கள் மீது அபாண்ட பழி போடக் கூடாது என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது கூறியதாவது, இப்போது நடக்கும் விவகாரங்கள் குறித்து கூறவேண்டும் என்றால் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போதே நான் தெளிவாக கூறிவிட்டேன். விஜய் சாரின் படத்தை நானும் முதல் நாள் முதல் காட்சி சென்று பார்க்கும் ரசிகை தான்.
ஜனநாயகன் படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தணிக்கை வாரியம் இப்படி செய்தது தவறு. எந்த படத்திற்கும் அப்படி நடக்கக்கூடாது. நாங்கள் ஜனநாயகன் படத்துடன் போட்டியிட நினைக்கவே இல்லை. நாட்டின் மிகப்பெரிய நட்சிரத்தோடு போட்டியிட முடியுமா? எங்களுக்கும் பண்டிகை விடுமுறை வெளியீடு தேவைப்பட்டது. அவ்வளவுதான் காரணம்.
விஜய் சாரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருடைய மிகப்பெரிய ரசிகை நான். இதில் சந்தேகமே வேண்டாம். இதை நான் விஜய் சாரிடம் நேரில் கூட கூறியுள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதற்கு சூழல் இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை என்று சுதா கொங்கரா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
முதலில் விஜய் ரசிகர்களை சகட்டுமேனிக்கு ரவுடிகள் குண்டர்கள் என்று பேசிவிட்டு இப்போது அவர்களை சமாதானப்படுத்துவது போல் சுதா கொங்கரா பின்வாங்கி இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களிடம் இருந்து விழுந்த அடி காரணமாக சுதா கொங்கரா விஜய் ரசிகர்களிடம் மறைமுகமாக இப்போது மன்னிப்பு கேட்கும் சூழலுக்கு வந்து விட்டார் என்று பலரும் கூறி வருகின்றனர்.





