தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர் சி. குறிப்பாக அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா முறைமாமன் மேட்டுக்குடி ரெண்டு வின்னர் லண்டன் உனக்காக எல்லாம் எனக்காக அன்பே சிவம் அருணாசலம் உள்ளிட்ட பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்தன.
திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சுந்தர் சி இருந்து வருகிறார். அவரது மனைவி நடிகை குஷ்புவுடன் இணைந்து பல திரைப்படங்களை பல டிவி சீரியல்களை அவர் தயாரித்திருக்கிறார். தலைநகரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமான சுந்தர் சி 25க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்தும் விட்டார்.
மேலும் இப்போது அரசியல் களத்திலும் சுந்தர் சி குதித்துவிட்டார். அதிமுக பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அந்த தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அவர் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மதுரை மத்திய தொகுதியில் கூட்டணி வேட்பாளர் சுந்தர் சியை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் சுந்தர் சி பிரசாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்களித்து ஆதரவு தருமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த பிரசாரத்தின் போது சுந்தர் சி பேசியதாவது, திமுக சார்ந்த நிர்வாகிகள் சிலர் என்னை பற்றி பேசும்போது கூத்தாடி என்று விமர்சித்து பேசுகின்றனர். எம்ஜிஆரும் கூத்தாடி தான். ஜெயலலிதாவும் கூத்தாடி தான். ஆனால் திமுகவின் கண்களில் எப்படி அந்த கூத்தாடிகள் விரலை விட்டு ஆட்டினார்கள் என்பதை கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். நான் கூத்தாடி என்பதை மறுக்கவில்லை.
ஆனால் அதே நேரத்தில் கருணாநிதியும் சினிமாவுக்கு கதை எழுதியவர்தான். கதை வசனம் எழுதியவர்தான். மேடை நாடகங்களில் நடித்தவர்தான். அவரும் ஒரு கூத்தாடி தான். மதிப்பிற்குரிய முதல்வர் ஸ்டாலினும் சினிமாவில் நடித்திருக்கிறார். மதிப்பிற்குரிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பல படங்களில் நடித்து விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். அதனால் உதயநிதியை பார்த்து திமுக காரங்க அவரை கூத்தாடி என்று கேள்வி கேட்பார்களா? என்று சுந்தர் சி பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





