தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு அவர் இயக்குனராக அறிமுகமான படம் உள்ளத்தை அள்ளித்தா. கார்த்திக் ரம்பா மணிவண்ணன் கவுண்டமணி செந்தில் கசன்கான் பாண்டு ஜோதிமீனா ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் காதல் காமெடி கவர்ச்சி ஆக்சன் என்ற ஜானரில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் இயக்குனர் சுந்தர் சி. குறிப்பாக இவர் இயக்கிய படங்களில் நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்று தனிப்பட்ட முறையில் அவரது இமேஜை வேற லெவலுக்கு கொண்டு சென்றன.
உதாரணமாக தலைநகரம் படத்தில் நாய் சேகர் வின்னர் படத்தில் கைப்புள்ள கிரி படத்தில் பேக்கரி ஓனர் வீரபாகு லண்டன் படத்தில் வக்கீல் வெடிமுத்து ரெண்டு படத்தில் மேஜிக் ஷோ கிரிகாலன் போன்ற கேரக்டர்களில் வடிவேலு ஏற்றிருந்த காமெடி ரோல் பெரிய அளவில் சக்ஸஸ் ஆனது. இப்போது வெளியாகி உள்ள கேங்கர்ஸ் படமும் நல்ல ஒரு வரவேற்பை வடிவேலுவுக்கு தந்திருக்கிறது.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் என்றால் ரூ. 200 கோடி ரூ.300 கோடி ரூ.500 கோடி என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகின்றனர். ஆனால் தியேட்டர்களில் பார்த்தால் ரசிகர்களின் கூட்டம் சில தினங்களிலேயே குறைந்து காணப்படுகிறது. பிறகு எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ஏனெனில் சில படங்கள் ரூ. 100 கோடி வசூலை கடப்பதே பெரும்பாடாக இருந்து வருகிறது. அதிலும் பெரிய ஹீரோக்கள் படம் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் அந்த படம் குறித்த விமர்சனங்கள் உடனடியாக வைரலாகி விடுகின்றன. அதிலும் மொக்கையான படம் என்றால் முதல் நாளே தியேட்டர்களில் கூட்டம் பாதியாகி விடுகிறது. அப்படி இருக்கையில் இப்படி வசூல் நிலவரங்கள் தாறுமாறாக எகிறுவது எப்படி என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி கூறியதாவது, தமிழ் சினிமாவில் ரூ. 500 கோடி வசூல் என்று சொல்வதெல்லாம் உண்மை இல்லை. எத்தனை தயாரிப்பாளர்கள் கதறுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அப்படி சொன்னால்தான் ஹீரோ அடுத்த படம் வாய்ப்பு தருவார்கள் என்பதால் அப்படி விளம்பரம் செய்கிறார்கள் என்று சுந்தர் சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





