எப்போதுமே சர்ச்சைகளில், விமர்சனங்களில் சிக்கிக்கொள்வதில் தமிழ் சினிமா நடிகர்களில் முன்னிலை வகிப்பவர் சிம்பு என்கிற சிலம்பரசன். இவரது தந்தை டி ராஜேந்தரை தமிழ் சினிமாவில் அஷ்டவதானி என்று அழைப்பர். அதற்கு காரணம் அவரது பன்முகத்தன்மை தான். அவரே நடிப்பார். கதை எழுதுவார். பாடல் எழுதுவா். வசனம் எழுதுவார். இசை அமைப்பார், டைரக்ட் செய்வார் இப்படி சகல வித்தைகளும் அறிந்தவர் அவர்.
அதே போல் அவரது மகன் சிம்பு என்கிற சிலம்பரசனும் தந்தையை போலவே சிறந்த கலைஞர்தான். நடனம், பாட்டு, கதை, இசை, டைரக்ஷன் என இவரும் தமிழ்சினிமாவில் பல வித்தைகளை கற்றவர்தான். லிட்டில் சூப்பர் ஸ்டார் என ஆறு வயதிலேயே ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். தனது மழலை நடிப்பால், ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் என்றால் மிகையல்ல.
தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வரவேண்டிய சிலம்பரசன் அடிக்கடி காதல் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர். குறிப்பாக நயன்தாராவுடன் சில காலம் கிசுகிசுக்கப்பட்டார். இவரும் நயன்தாராவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வல்லவன் படம் வெளியான காலத்தில் செம வைரலானது. அப்போது சமூக வலைதளங்கள் இல்லாததால் பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதப்பட்டது.
மேலும், சிலம்பரசனை ஹீரோவாக வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மிகவும் நொந்து போக காரணம், இவர் படப்பிடிப்புகளுக்குச் செல்வதில் நவரச நாயகன் கார்த்திக்கை பின்பற்றுபவர். அவர் ஓட்டல் அறையில் படுத்துக்கொண்டு ஷூட்டிங் நடக்கும் இடத்தை எட்டிப் பார்க்க மாட்டார். சிலம்பரசன் மொபைல் போனை ஆப் செய்துவிட்டு காணாமல் போய் விடுவார்.
இதனால் சிலம்பரசன் படங்கள் என்றாலே, அவரை கமிட் செய்ய தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் யோசிக்கும் நிலை இருந்தாலும், சில படங்களில் அவர் சரியாக நடித்து கொடுத்ததால் பாராட்டப்பட்டார். குறிப்பாக மாநாடு படத்துக்கு பிறகு வெந்து தணிந்தது காடு, செக்கச்சிவந்த வானம், பத்துதல போன்ற படங்களில் சிலம்பரசன் சரியாக நடித்திருந்தார். இப்போது தேசிங்கு பெரியசாமி படத்தில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் பத்துதல படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த சரவணன் என்பவர், மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பத்துதல படத்தில் அவர் பணிபுரிந்ததால், சிலம்பரசன் அவருக்கு உதவ வேண்டும் என, சமூகவலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து துபாயில் உள்ள சிம்பு, இதுபற்றி அவரது கவனத்துக்கு சென்றதால், உடனடியாக சென்னைக்கு தொடர்பு கொண்டு ஒரு லட்சம் ரூபாயை, நோய்வாய்ப்பட்ட சரணவனுக்கு சென்று சேரும்படி செய்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.





