உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. இன்று முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். சுந்தர் சி படங்கள் என்றாலே காதல் காமெடி கவர்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. இரண்டரை மணி நேரம் பொழுதை ஜாலியாக கழிக்க சுந்தர் சி படங்கள் உத்தரவாதமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பி போகலாம்.
அதற்கு சமீபத்திய உதாரணமாக 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜ ராஜா, கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றியை கொடுத்தது. அடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தை சுந்தர் சி தான் டைரக்ட் செய்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி சம்பளம் மட்டுமே ரூ. 20 கோடி என்பதும், நயன்தாரா சம்பளம் ரூ. 10 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் துவக்க விழா வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. சுந்தர் சி இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, நான் ஒரு பெயிலியர் ஆக்டர்தான், அதற்கு காரணம் சொல்றேன். என்னுடைய முதல் 3 படங்கள் ஹீரோவாக ஹிட் ஆனது. தலைநகரம் வீராப்பு சண்ட என்ற 3 படங்கள் நன்றாக ஓடியது. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம் திரும்பிப் பார்த்தால் நாலாம்பக்கமும் இருந்து நிறைய படங்கள் எனக்கு நடிக்க வருகிறது.
அப்படி வந்த படங்கள் எல்லாம் ஒத்துக்கிட்டேன். அப்படி வந்த படங்கள் கிட்டத்தட்ட வரிசையாக 8 படங்கள் பிளாப் ஆகி விட்டது. இதுக்கு அப்புறம் நடிப்பே வேணாம் நமக்கு ஒத்து வரலே என்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். ஒரு இயக்குனராக சினிமாவில் கம்போர்ட் ஜோன் இருந்தது. ஆனால் ஒரு நடிகராக இன்னொரு டைரக்டர் படத்துல நான் நடிக்கும் போது சில விஷயம் தப்பா தெரிஞ்சாலும் அந்த இடத்தில் வாயை மூடிக்கிட்டு பேசாமல் இருக்க வேண்டியதா போச்சு.
அதனால் இனிமே நடிப்பே வேணாம். டைரக்ஷன் மட்டுமே பண்ணலாம் அப்படீங்கறே முடிவுக்கு வந்துட்டேன். அப்ப பண்ணியதுதான் கலகலப்பு. என்னை எப்பவுமே ஒரு ஹீரோவா நான் நினைச்சுக்கிட்டது இல்லை. நீங்க ஹீரோவா என்று கேட்டால் நான் பெயிலியர் ஆன ஒரு நடிகர்தான். சுந்தர் சி என்ற டைரக்டர் இருக்கிறதால்தான் சுந்தர் சி என்கிற நடிகர் மார்க்கெட்டில் இருக்கிறார் என்று அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.





