தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக சுந்தர் சி பல வெற்றிப் படங்களை தந்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் முதலில் ரூ. 100 கோடி வசூலை கடந்தது சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை எந்த தமிழ் படமும் வெற்றி படமாக அமையவில்லை.
இப்போது சுந்தர் சி அரண்மனை 5 படத்துக்காக ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கி இருக்கிறார். அதே நேரத்தில் வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்குகிறார். இதில் மூக்குத்தி அம்மனாக மீண்டும் நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
இயக்குனர் சுந்தர் சியை பொருத்த வரை ஜாலியான கலகலப்பான பொழுதுபோக்கான படங்களை தருவதில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக இருக்கிறார். ஜாலியாக இரண்டரை மணி நேரம் கழிக்க வேண்டுமானால் கண்டிப்பாக சுந்தர் சி படத்துக்கு செல்லலாம் என்ற ஒரு மனநிலையை ரசிகர்களிடம் உருவாக்கி ஜெயித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 1990களில் பிரபல நடிகையாக முன்னணியில் இருந்தவர் குஷ்பு. முறைமாமன் என்ற படத்தை சுந்தர் சி இயக்கினார். இதில் ஜெயராம், குஷ்பு கவுண்டமணி செந்தில் மனோரா ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் குஷ்பு நடித்த போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, இயக்குனராக பல நடிகைகளுடன் நான் பணி செய்து இருக்கிறேன். அதில் நான் ஒர்க் பண்ணியதில் எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோயின் யார் என்றால் அது சௌந்தர்யா தான். ஒருவேளை குஷ்புவை நான் என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால், கண்டிப்பாக சௌந்தர்யாவுக்கு ப்ரப்போஸ் பண்ணி இருப்பேன்.
அவங்க ரொம்பவும் நல்ல கேரக்டர். அப்படி ஒரு நல்ல பெண்ணை பார்ப்பது மிகவும் அரிது. அவருடைய அண்ணன், அவங்களை விட்டு ஒரு செகண்ட் கூட நகர மாட்டார். அதனால்தான் சாகும்போது கூட ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து போய்ட்டாங்க. சௌந்தர்யா இறப்பு ரொம்பவும் துரதிர்ஷ்டமான விஷயம் என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி. அவர் இயக்கிய அருணாசலம் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





