- Advertisement -
Homeபொழுதுபோக்குபாட்ஷாவை மீண்டும் இயக்கினால், நிச்சயம் இந்த நடிகருடன் மட்டும்தான் பணிபுரிவேன்... இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நச்...

பாட்ஷாவை மீண்டும் இயக்கினால், நிச்சயம் இந்த நடிகருடன் மட்டும்தான் பணிபுரிவேன்… இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் நச் பதில்…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்துக்கு பாட்ஷா என்னும் மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. ஆரம்பத்தில் இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக அவர் பணி புரிந்தார். ஏக் துஜே கே லியே, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை திரைப்படங்களில் பணிபுரிந்த அவர், கமல்ஹாசனை வைத்து சத்யா திரைப்படத்தை எடுத்து இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

வேலையில்லாத பட்டதாரி, கோபக்கனல் கொப்பளிக்கும் துடிப்பான கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான இந்தத் திரைப்படம், வெள்ளிவிழா பூண்டது. இதன் பிறகு தெலுங்கில் சில திரைப்படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவுக்கு, ரஜினிகாந்தை வைத்து அண்ணாமலை படத்தை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படத்தில் பணக்கார ஏழை நண்பர்களுக்கு இடையே நடைபெறும் யுத்தத்தை, ரஜினிக்கு உண்டான ஸ்டைலில் காட்சிப்படுத்தி நம்மை அசர வைத்திருப்பார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இதன் பிறகு, ரஜினியை வைத்து வீரா படத்தை இயக்கிய அவர், பாட்ஷா திரைப்படத்தையும் கையில் எடுத்தார். இன்று வரை ரஜினி என்றாலே பாட்ஷா திரைப்படம் தான் பலருக்கும் ஞாபகம் வரும் என்று அளவுக்கு, அந்தத் திரைப்படத்தில் தனது நுணுக்கங்களை செதுக்கி இருந்தார் சுரேஷ் கிருஷ்ணா.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற, அடுத்ததாக ரஜினியுடன் மீண்டும் இணைந்து பாபா எடுத்தார். இதன் நடுவே ஆஹா, சங்கமம், ஆளவந்தான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் பாட்ஷா படத்தை நீங்கள் மீண்டும் எடுத்தால் யாரை வைத்து இயக்குவீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய அவர்,

இந்தப் படத்திற்கு அடிப்படையாகவே ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜ் தேவைப்படுகிறது. அந்த ஸ்டாருக்கான அந்தஸ்து அதில் இல்லை என்றால், படம் யாரிடமும் போய் சென்று சேராது. பாஷா படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியுடன் பண்ணலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் அவர் பிஸியாக இருந்ததால் அது பண்ண முடியாமல் போனது. பிறகு மோகன் பாபுவை வைத்து பண்ணலாமா என்று ரஜினி சார் என்னிடம் கேட்டார்.

ஆனால் நான் சரியாக வராது என்று கூறி விட்டேன். சிரஞ்சீவி அதில் நடித்தால் இமேஜ் சரியாக வரும் என்று கூறினேன். அதற்கு ரஜினி சாரும் நீங்கள் கூறுவது சரிதான் என்று தெரிவித்தார். அண்ணாமலைக்கு பிறகு நான் இந்த படத்தை பண்ணுவதால், நல்ல இமேஜ் இருக்கும் நடிகரை தேர்ந்தெடுத்தால்தான் ஒர்க் அவுட் ஆகும் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்போது பாட்ஷா படத்தை எடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் நான் அஜித்தை தான் தேர்வு செய்வேன் என்று தெரிவித்தார். சுரேஷ் கிருஷ்ணாவின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்