இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸாகிறது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை கால படமாக இது வெளியாவது குறிப்பிடத்தக்கது. தி கோட் படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை வெளியானது.
ஏற்கனவே தி கோட் படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகியும் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், டிரெய்லரில் படத்தின் அனைத்து அம்சங்களை கொண்டுவர இயக்குனர் வெங்கட்பிரபு பகீரத முயற்சியை மேற்கொண்டார். அதன் காரணமாகவே, ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட திட்டமிட்ட டிரெய்லர், 2 நாள் தாமதமாக 17ம் தேதி மாலை வெளியானது.
தி கோட் படம் டிரெய்லர் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து மற்றும் ஒரு பெரிய சாதனையை படைத்திருந்தாலும் இந்த படம் எல்லா விதங்களிலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் ஒரு படமாக இருக்குமா என்பதை படம் பார்த்த பிறகுதான் உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் படத்தில் பல மைனஸ்கள் இருப்பது டிரெய்லர் காட்சிகளில் வெளிப்படுகிறது.
குறிப்பாக நடிகை சினேகா அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் ஒரு காட்சியில் லைலாவிடம், என் கணவர் காந்திக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருக்குமா என்று கேட்கிறார். காந்தி என பெயர் வைத்துள்ள கேரக்டரை பெண்கள் தொடர்பு இருப்பவராக படத்தில் வெங்கட்பிரபு காட்டியிருந்தால் அது நிச்சயம் சர்ச்சையாக மாறும்.
அதே போல், காந்தி என்ற பெயரில் விஜயை அறிமுகப்படுத்தும் காட்சியில் அவர் மதுபான பாட்டிலில் மதுவை அப்படியே வாயில் கொட்டி குடிப்பது போல காட்டியிருப்பதும் ரசிகர்களுக்கு எரிச்சலலை கிளப்பியிருக்கிறது. காந்தி பெயர் கொண்ட கேரக்டரை குடிகாரனாக காட்டலாமா என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து வெங்கட்பிரபு கூறுகையில், காந்தி என்ற பெயர் வைத்தால் குடிக்க கூடாது என்று உள்ளதா? என் நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயர் கூட காந்தி தான். அவரை மையமாக வைத்துதான் விஜய்க்கு படத்தில் காந்தி என பெயர் வைத்தேன். ஏன் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று திருப்பி கேட்டுள்ளார். காந்திஜி நமது தேசப்பிதா. அவரை கௌரவிக்கும் விதமாக படம் எடுப்பது ஒரு படைப்பாளியின் பொறுப்பு என்ற சின்ன விஷயம் கூட வெங்கட்பிரபுவுக்கு தெரியலையே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





