இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜீவி பிரகாஷ்குமார். தொடர்ந்து கிரீடம் பொல்லாதவன் ஆயிரத்தில் ஒருவன் அங்காடித் தெரு ஆடுகளம் என பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். பல சூப்பர் ஹிட் படங்கள் அவரது இசையில் வெளியானது.
ஒரு கட்டத்தில் இசையமைப்பாளராக இருந்த அவர் நடிகராகவும் மாறினார். டார்லிங் பென்சில் குப்பத்து ராஜா ஜெயில் திரிஷா இல்லேன்னா நயன்தாரா சிவப்பு மஞ்சள் பச்சை என பல படங்களில் நடித்தார். இவரது படங்கள் சூப்பர் ஹிட் ஆகவில்லை என்றாலும், ரசிகர்களின் வரவேற்புக்குரிய படங்களாக இருந்தன. எந்த படமும் பிளாப் ஆகவில்லை.
இவர் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது மாமா போலவே இசையில் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறார். சமீபத்தில் வெளியான அமரன் லக்கி பாஸ்கர் படங்களுக்கு இசையமைத்ததும் ஜீவி பிரகாஷ்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகராக இசையமைப்பாளராக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிப் பாதையில் பவனி வருகிறார்.
ஆனால் கடந்தாண்டில் தனது காதல் மனைவி பாடகி சைந்தவியை இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் பிரிந்தார். விவாகரத்து செய்வதாகவும் அறிவித்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாமா ஏஆர் ரகுமான் அழைத்து ஜீவி பிரகாஷ்குமாரை சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர் இதில் உடன்படவில்லை. ஆனால் தொழில் ரீதியாக இருவரும் இணைந்து பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிங்ஸ்டன் படத்தின் டிரயெ்லர் படம் வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, 10 வருஷத்துக்கு முன்னாடி ஜீவி பிரகாஷ் குமார் என்னிடம் மியூசிக் பண்ணுவது மட்டுமே எனக்கு சலிப்பாக இருக்கிறது. வெளியே போகணும், நடிக்கணும்ன்னு நினைக்கிறேன் என்று என்னிடம் சொன்னார்.
அப்போது நிறைய பேர் அவரை நடிக்க வேண்டாம் என்று சொன்னாங்க. அதில் நானும் ஒருவன். நல்லா மியூசிக் பண்ணிட்டு இருக்கார். இந்த நேரத்துல ஏன் நடிக்கணும்ன்னு யோசிச்சேன். ஆனால் அவர் நடிச்சதுக்கு அப்புறம் அவரோட மியூசிக் இன்னும் பிரமாதமாக, அழகாக மாறியது. நடிப்பு அவருக்கு படத்தைப் பற்றி இன்னும் ஆழமாக புரிந்துக் கொள்ள வெச்சது. அதனால் அவருடைய மியூசிக் முன்பை விடவும் முன்னேறி இருக்கிறது என்று இயக்குனர் வெற்றிமாறன் அந்த விழாவில் பேசியிருக்கிறார்.





