நடிகர் விஷால் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் மகுடம். இந்த படத்தின் இயக்குனர் ரவி அரசு படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தை விட்டு விலகி விட்டார். அதன் பிறகு மகுடம் படத்தை படத்தின் கதாநாயகன் ஆன நடிகர் விஷாலே டைரக்ட் செய்து அவரே நடித்து அவரே சொந்தமாக தயாரிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் விஷாலுடன் அஞ்சலி துஷாரா விஜயன், ஜான் விஜய் வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷால் 3 கெட்டப்களில் நடித்திருக்கிறார்.
மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் கூறியதாவது, நான் இதற்கு முன்பும் பல படங்களை கோஸ்ட் டைரக்டராக இயக்கியிருக்கிறேன். அந்த படங்களின் பெயர்களை நான் சொல்ல விரும்பவில்லை. என்றாலும் முறைப்படி டைட்டில் கார்டில் பெயர் வரும் முதல் படம் மகுடம் தான். நான் இயக்குனர் கனவோடு தான் சினிமாவிற்குள் வந்தேன். பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
விஜய்க்கு மட்டுமே பல கதைகள் வைத்திருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக நான் நடிகனாகி விட்டேன். ஆனாலும் எனக்குள் இருந்த இயக்குனர் கனவு இப்போது மகுடம் மூலம் நனவாகிவிட்டது. இந்த படத்தில் 3 தோற்றங்களில் நடித்துள்ளேன். ஒருத்தர் மெடிக்கல் ரெப்பா வர்ற மிடில் கிளாஸ் குடும்பஸ்தன். இன்னொருத்தர் கேங்ஸ்டர். 3வது ஆளு தீவிரமான இளையராஜா ரசிகர். இப்படி 3 ரோலுமே தனித்துவமாக இருக்கும்.
ஹீரோவா கேமராவுக்கு முன்னாடியும் இருந்தாகணும். டைரக்டராக கேமராவிற்கு பின்னாடியும் இருந்தாகணும். பொறுப்புகள் அதிகம் இருந்துச்சு. அப்பப்போ திரைக்கதை வசனங்களில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். எடுத்து முடித்த காட்சிகளை அன்னைக்கே எடிட்டிங் செய்யும் வேலையும் வந்துவிடும். இப்படி ஒரு வருஷம் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து இருக்கேன்.
படத்தின் கடைசி 10 நிமிடம் கிளைமாக்ஸ் பரபரன்னு இருக்கும். ஒரு மாஸ் கமர்சியல் படத்திற்கான அத்தனை விஷயங்களும் மகுடம் படத்தில் இருக்கு. 1960 1990 2025 என்று மூன்றுவிதமான காலகட்டத்தில் நடக்கும் கதை. அமைதி தவழும் சாந்தமான ஒரு உலகமும் ஒரு கேங்ஸ்டர் உலகமும் நேருக்கு நேர் மோதினால் என்னவாகும். அந்தப் போரில் யார் ஜெயிக்கிறாங்க? யாருக்கு மகுடம் சூட்டுகிறார்கள் என்பது தான் மகுடம் படத்தின் கதை என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.





