நடிகர் கமல் இப்போது, இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு இருக்கிறார். இந்தியன் 2 படம் எடுக்கும்போதே, இந்தியன் 3 படத்திற்கான விஷயங்களும் கிடைத்துவிட்டதால் ஷங்கர் அதையும் சேர்த்து எடுத்து, 2ம் பாகம், 3ம் பாகம் என இந்தியன் படத்தை 3 பாகங்களாக மாற்றி விட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக எச். வினோத் இயக்கத்தில் ஒப்பந்தமாகியுள்ள படத்தை கமல் முடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே பார்லிமெண்ட் தேர்தல் வருவதால், அதற்காகவும் கமல் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.
இதுமட்டுமின்றி இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 நடந்து வருகிறது. இப்போது 45 நாட்களை கடந்துள்ள இந்த நிகழ்ச்சி எப்படியும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க உள்ளது. இதற்காக வாரந்தோறும் ஒருநாள் கட்டாயம் ஒதுக்கி, பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் பஞ்சாயத்துகளை தீர்க்க வேண்டிய வேலையும் கமலுக்கு உள்ளது.
சனி, ஞாயிறு என இரு தினங்கள் கமல் வருவதால், பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்காக அவர் அந்த நிகழ்ச்சியில் இரண்டு நாட்கள் பங்கேற்பது இல்லை. சனிக்கிழமை ஒருநாளில் எடுக்கப்படும் காட்சிகளே, சனி ஞாயிறு என 2 தினங்களும் பிரித்து ஒளிபரப்பாகிறது. ஆக, பிக்பாஸ் போட்டியாளர் வெளியேறுவது சனி இரவுதான். ஞாயிறு இரவு அல்ல.
இந்நிலையில், இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பு விசாகபட்டிணத்தில் நடந்து வருகிறது. நடிகர் பாபிசிம்ஹா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் கமல் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், இந்தியன் கமலை பார்த்து ஆரவாரக் கூச்சலிட்டு ஆர்ப்பரித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
பின் ஷூட்டிங் பிரேக் இடையே ஓய்வாக இருந்த கமலை கூட்டத்துக்குள் ஓடிச் சென்று பார்த்து, ஆசை ஆசையாக கைகுலுக்கி, சந்தோஷமாக கட்டியணைத்து பலரும் செல்பி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். அடுத்த சில நிமிடங்களில் தான் அந்த டிவிஸ்ட் வெளிப்பட்டது. அங்கு கமல் தோற்றத்தில் அந்த நபர் மெதுவாக தனது மேக்கப்பை கலைக்க, அவர் நடிகர் கமல்ஹாசன் அல்ல, டூப் நடிகர் என தெரிய வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள், இப்படி ஏமாந்துட்டோமே என நொந்துபோய் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.





