தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சத்யராஜ். இவர் 1980களில் தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து பிறகு 1990களில் பல படங்களில் ஹீரோவாக நடித்தவர். ஹீரோ இமேஜ் ஒருகட்டத்தில் சரிந்து போனதால் கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது நடிகர் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்திருக்கிறார்.
நடிகர் சத்யராஜூக்கு சிபிராஜ் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜீத் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா என்ற ஒரு கேள்வியை குறிப்பிட்டு அதற்கான பதிலை திவ்யா சத்யராஜ் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் திவ்யா சத்யராஜ் கூறியிருப்பதாவது, சிலர் என்னிடம் அஜீத் பிடிக்குமா அல்லது விஜய் பிடிக்குமா என்று கேள்வி எழுப்பினால் நான் எப்போதும் எனக்கு அஜீத் தான் பிடிக்கும் என்று சொல்வேன். ஏனென்றால் அவர் சிறந்த நடிகர். முக்கியமாக அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்.
தனது வாழ்க்கையில் உள்ள பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துபவர். அவரின் ரசிகர்களும் அதை பின்பற்றுகிறார்கள். அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோழைகள் போல துன்புறுத்தியது இல்லை. அவர் உயர்ந்த பண்புடன் நடந்து கொள்கிறார்கள். தன்னுடைய ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களுக்கு அச்சமூட்டுவதையோ அவமரியாதை செய்வதையோ ஒருபோதும் அவர் அனுமதிக்க மாட்டார். அவர் அமைதியாக பலருக்கும் உதவிகள் செய்திருக்கிறார்.
பெண்களுக்கு எதிரான மிரட்டல்களையோ அல்லது துன்புறுத்தல்களையோ ஊக்குவிக்கும் அல்லது அதைப் பார்த்து மௌனமாக இருக்கும் எந்த தலைவரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்பட தகுதியற்றவர் என்று நான் நம்புகிறேன் எனக் குறிப்பிட்டு பதிவிட்டுகிறார்.
நடிகர் அஜீத்குமாரை தனக்கு பிடித்த நடிகராக உதாரணம் காட்டி, நடிகர் விஜய் குறித்து விமர்சித்து திவ்யா சத்யராஜ் செய்துள்ள இந்த பதிவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.





