நடிகர் விஜய் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ளார். அங்குள்ள மைதானத்தில் கோட் படத்தின் சூட்டிங் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, விடிவி கணேஷ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், மைக் மோகன் என நட்சத்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் திரிஷா நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் ஒரு பாடலுக்கு அவர் நடனம் ஆடுவதாக பேசப்பட்டது. இது உண்மை என்பதைப் போல, சமீபத்தில் ஒரு போட்டோ வெளியாகி இருந்தது. அதில் தயாரிப்பாளர் அர்ச்சனாவுடன் த்ரிஷா இருந்ததால் அவர் படத்தில் இடம்பெற்று இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்த திரைப்படத்திற்காக விஜய் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார். இதற்கு கங்கை அமரன் வரிகளை எழுதியுள்ளார். டைம் ட்ராவல் அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் கோட் படத்தின் முக்கியமான காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு திருவனந்தபுரம் சென்றுள்ளது. அங்கு விஜய்க்கு உற்சாக வரவேற்பை அம்மாநில ரசிகர்கள் கொடுத்தனர். காரில் சென்ற அவரை பின்தொடர்ந்து பலரும் புகைப்படம் எடுத்தனர். கூட்ட நெரிசலில் அவரது கார் சேதம் அடைந்தது. தொடர்ந்து அவர் தங்கும் இடத்திற்கும் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அந்த இடமே திருவிழா போல் களைகட்டியுள்ளது.
இப்படியான சூழலில் நடிகர் ரஜினிகாந்த் திருவனந்தபுரத்திற்கு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்டையன் திரைப்படத்தின் இறுதி படப்பிடிப்பிற்காக அவர் அங்கு செல்கிறாராம். இதனால் ரஜினி விஜய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.





