நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம்தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அவர் அறிவித்து விட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், தொடர்ந்து திமுக பாஜக கட்சிகளுக்கு எதிரான தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அதே நேரத்தில் மக்களை நேரில் சந்திக்காமல் அரசியல் களத்துக்கு வராமல் பனையூரில் இருந்துக்கொண்டு ஒர்க் பிரம் ஹோம் முறையில் அரசியல் செய்வதாகவும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு கொண்டிருப்பதாகவும் குறிப்பாக இன்னும் பிரஸ்மீட் வைத்து செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்றும் அவரை அரசியல் கட்சிகள் சார்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடிகர் விஜய் வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக அரசை அகற்றிவிட்டுதான் மக்கள் மறுவேலை பார்ப்பார்கள், திமுக அரசு தங்களுக்கு இனி வேண்டாம் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். அதனால் திமுக என்ன கூட்டணி கணக்கு போட்டாலும் அது தப்பாக தான் போகும் என்று நடிகர் விஜய் தொடர்ந்து பேசி வருகிறார்.
சமீபத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்ட நிலையில், அதுகுறித்து நடிகர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதில் சின்ன மீன்கள் முதல் பெரிய திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றும் கூறியிருந்தார். திராவிட மாடல் அரசு திமுக என்பதை விளம்பர மாடல் அரசு என்றும் நடிகர் விஜய் கிண்டலடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டம் வாரியாக, தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு கேட்க உள்ளார், தவெக கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் மக்களிடம் நேரடியாக கோரிக்கை வைத்து தனது எதிர்கால அரசியல் பயண திட்டங்களை விளக்கி பேச உள்ளார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் பங்கேற்கும் தொகுதிகளில், மாவட்டங்களில் அவருக்கு அடுத்ததாக மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனை பேச வைத்து, குறிப்பாக விஜய் குறித்து விமர்சித்து பேசி விஜய்க்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் தனது கருத்துகளை அவர் பேச திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்து விரைவில் கமலிடம் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த அமைச்சர்கள் பேச உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





