தமிழ் சினிமாவில் 33 ஆண்டுகளாக நடிகராக வலம் வந்தவர் விஜய். ஆரம்பத்தில் இளைய தளபதி என்றும் பிறகு தளபதி என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் விஜய்க்கு கடந்த 15 ஆண்டுகளாக மிகப்பெரிய வெற்றிப்படங்கள் அமைந்தது. அதில் ஒரு சில படங்கள் படுதோல்வியை சந்தித்தாலும் அவரது தோல்வி படங்களும் பெரிய வசூலை குவித்தன என்றால் அது மிகையல்ல.
விஜய் படம் என்றாலே விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வணிக ரீதியாக கணிசமான லாபத்தை கொடுக்கும் என்பதால் அவரது படங்களை இயக்க இயக்குனர்களும் தயாரிக்க தயாரிப்பாளர்களும் தவமிருந்தனர் என்றால் அது பொய்யல்ல. அந்த வகையில் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து தமிழக அரசியலுக்கு வந்து சாதனை படைத்தார்.
அவரது தவெக கட்சி சந்தித்த முதல் தேர்தலிலேயே தனித்து போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். விஜய் நடித்த படங்கள் வெளியாகும் போது அவரது முந்தைய படத்தின் சாதனைகளை அவரது புதிய படமே முறியடிப்பது வழக்கம். இந்த சூழலில் நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் நாளை மறுதினம் 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் நாள் 5 காட்சிகளின் டிக்கெட் புக்கிங் விற்று தீர்ந்து விட்டன.
மாவட்டம் வாரியாக அமைச்சர்களும் தொகுதி வாரியாக எம்எல்ஏக்களும் களத்தில் இறங்கி மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 2வது நாளில் 24ம் தேதி ஆன்லைன் புக்கிங் டிக்கெட் எளிதாக தியேட்டர்களில் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக விஜய் படங்கள் என்றாலே சகல தரப்பினரும் அவரது படத்தைக் காண ஆர்வமாக வருவார்கள். படமும் வசூலை குவிக்கும்.
ஆனால் இந்த முறை அப்படி வசூலை குவிக்கும் அளவுக்கு அனைத்து தரப்பினரும் ஜனநாயகன் படம் பார்க்க வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இதற்கு முந்தைய விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது திமுக அதிமுக என்ற கட்சி பாகுபாடு இல்லாமல் நடிகர் விஜய் படத்தை பார்க்க குடும்பத்துடன் வந்தார்கள். ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்பில்லை. ஏனென்றால் தவெக ஆட்சியால் திமுக அதிமுகவினரின் கடுமையான வெறுப்பு விஜய் மீது உள்ளது.
மேலும் ஜனநாயகன் ஏ படம் என்பதால் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படம் பார்க்க தியேட்டரில் அனுமதி இல்லை. அதனால் ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் தானாகவே குறையும். ஏற்கனவே ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாகிவிட்டது. அதுமட்டுமின்றி பகவந்த் கேசரி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன். அதனால் ஆந்திரா தெலங்கானா பகுதிகளில் இந்த படம் பெரிய வரவேற்பை பெறுமா என்பதும் சந்தேகம் தான். அதனால் வழக்கமான விஜய் படங்களைப் போல இந்த படம் வசூல் சாதனை படைக்குமா என்ற பெரிய சந்தேகமும் கேள்வியும் எழுந்துள்ளது.





