ஓ மை கடவுளே படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு டிராகன் அவர் இயக்கத்தில் வெளியான 2வது படம். அதே போல் தமிழ் சினிமாவில் கோமாளி படம் மூலம் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்துக்கு பிறகு நாயகனாக நடித்த 2வது படம்தான் டிராகன். இப்படி இயக்குனர் ஹீரோவுக்கு 2வது படமே இவ்வளவு பெரிய வெற்றியை தேடித் தரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான டிராகன் படம், கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதியன்று காதலர் தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டு இருந்தது. அதே நாளில்தான் இயக்குனர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் திரைக்கு வர இருந்தது.
ஆனால் பிப்ரவரி மாதம் 6ம் தேதி நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படம் ரிலீஸ் செய்யப்பட்டதால், அந்த படத்திற்கு வழிவிடும் விதமாக டிராகன் படமும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் பிப்ரவரி மாதம் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் தனுஷ் இயக்கிய படத்துக்கு போதிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை.
ஆனால் பிரதீப் ரங்கநாதன் அனுபமா பரமேஸ்வரன் ஹயாடுவ லோஹர் விஜே சித்து மிஷ்கின் கௌதம் மேனன் ஜார்ஜ் மரியன் இந்துமதி இவானா நடித்த டிராகன் படம் மாபெரும் வெற்றிப் படமாக ரசிகர்களிடம் அபார வரவேற்பை பெற்றது. படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 50 கோடி 9 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை கடந்தது.
டிராகன் படம் ரிலீஸான நாளில் இருந்து தினமும் ரூ. 8 கோடி என்பது தமிழ்நாடு தியேட்டர்களில் வசூலாக இருந்து வந்தது. சனி ஞாயிறு தினங்களில் வசூல் அதிகரித்து வாரத்தின் மற்ற நாட்களில் வசூல் குறைவது வழக்கமான நிலையில், டிராகன் படம் மட்டும் வாரத்தின் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியான வசூலை அதுவும் ரூ. 8 கோடி வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது படம் வெளியாகி 16 நாட்களில் டிராகன் படத்தின் வசூல் மொத்தம் ரூ. 140 கோடியை கடந்துள்ளது. இன்னும் சில தினங்களில் டிராகன் படத்தின் மொத்த வசூல் ரூ. 150 கோடியை தொட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டாப் ஸ்டார் நடிகர்களின் படங்கள் ரூ. 100 கோடியை எட்டுவதே பெரிய போராட்டமாக உள்ள நிலையில், இயக்குனராக இருந்து நாயகனாக நடித்த பிரதீப் ரங்கநாதனின் 2வது படமே இப்படி ஒரு அபார வசூலில் உச்சம் தொட்டிருப்பது டாப் ஸ்டார் நடிகர்களை எல்லாம் ஓரம்கட்ட செய்திருக்கிறது.





