இப்போதெல்லாம் புதிய படங்களை ரிலீஸ் செய்வதை விட அந்த படங்களை பிரமோசன் செய்வதுதான் அதற்கு முந்தைய முக்கிய பணியாக இருந்து வருகிறது. ஏனெனில் படத்துக்கு பிரமோசன் அதிகளவில் செய்ததால்தான் ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய அளவில் சென்றடைகிறது. அதனால் படம் ரிலீஸாக பல வாரங்களுக்கு முன்பே பிரமோ பணிகளை துவங்கி விடுகின்றனர்.
சமீபகாலமாக பெரும்பாலான படங்களின் பிரமோ நிகழ்வுகள் கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன. பர்ஸ்ட் லுக் போஸ்டர் பர்ஸ்ட் சிங்கிள் இசை வெளியீடு டிரெய்லர் வெளியீடு ப்ரி ரிலீஸ் என பல பிரமோ நிகழ்வுகளை கல்லூரிகளில் நடத்துவது அதிகரித்து வருகிறது.
ஏனெனில் எப்படியும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மாணவ மாணவியர் உள்ள கல்லூரிகளில் இந்த விழாக்களை நடத்தும் போது அவை பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. நடிகர் நடிகைகளை நேரில் பார்க்கும் மாணவ மாணவியர் அந்த நிகழ்வுகளை மீடியாக்களில் பரவ விடுகின்றனர். அதுவும் ஒருவிதத்தில் விளம்பரமாகி விடுகிறது.
இந்நிலையில் தமிழக அரசு, தனியார் கல்லூரிகளில் இதுபோன்று சினிமா சார்ந்த விழாக்களை நடத்த 10 சதவீதம் கேளிக்கை விதி விதித்துளளது. இனி கல்லூரியில் படக்குழுவினர் விழா நடத்த 10 சதவீதம் கேளிக்கை வரி அரசுக்கு செலுத்த வேண்டும். இது ஒரு தரப்பினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆனால் இதுபோன்ற பட விழாக்களை விஷூவல் கம்யூனிகேசன், சினிமா சார்ந்த பயிற்சி கல்லூரிகளில் நடத்தினால் ஒருவிதத்தில் அது மாணவர்களுக்கு பயன்படும். பொறியியல் கல்லூரிகளில்தான் பெரும்பாலும் இதுபோன்ற சினிமா விழாக்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது.
அதனால் கல்லூரிகளில் சினிமா விழாக்களை நடத்த தடை விதிக்க வேண்டிய தமிழக அரசு, அதற்கு அனுமதித்து 10 சதவீத கேளிக்கை வரி செலுத்த சொல்கிறது. மாணவர்களின் படிப்பு எதிர்காலம்தான் இதனால் பாதிக்கப்படும் என பெற்றோர்கள் தரப்பில் வருத்தப்படுகின்றனர். சினிமா விழாக்களை தனியார் அரங்குகளில் நடத்த மட்டுமே அரசு அனுமதிக்க வேண்டும். கல்லூரிகளில் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.





